தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முப்பெரும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ‘பணியாளர் குரல்’ தலையங்கத் திரட்டு நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட, கே.சுப்பராயன் எம்.பி பெற்றுக்கொண்டார். சங்கத்தின் மாநில தலைவர் இரா.சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் க.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் 45-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழா மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.சத்தியமூர்த்தி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், ‘தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும். அவர்களுக்கு மாதாந்திர ஊதியம் கருவூலம் மூலம் வழங்கப்பட வேண்டும்.
தொகுப்பூதியம், அவுட்சோர்சிங்கில் பணியாற்றி வரும் அரசுத் துறைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்’ என்பன உட்பட 14 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ‘பணியாளர் குரல்’ தலையங்கத்திரட்டு நூலை வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘அரசுப் பணியாளர்கள், வங்கி மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்து தவறானது. இவர்களும் பாட்டாளிகள்தான். உலகம் முழுவதும் கருத்தால், கரத்தால் உழைக்கும் மக்கள்தான் அந்தந்த நாடுகளை ஆள வேண்டும்’’என்றார்.
சங்க மாநிலத் தலைவர் சத்தியமூர்த்தி பேசும்போது, “அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களை நசுக்கும் போக்கை தவெக அரசு கையாள்கிறது. தமிழ்நாடு உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதியை முதல் பட்ஜெட்டிலேயே ரத்து செய்ததுடன், 18 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் என நிபந்தனை விதித்ததோடு பதவி உயர்வுக்கு சொத்துக் கணக்கு கேட்டது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தவெக அரசு அவுட் சோர்சிங் செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.