தமிழகம்

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஜூன் 25-ல் கனமழை வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் ஜூன் 25-ம் தேதி சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (ஜூன் 23) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 24-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 25 முதல் 28-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

25-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 26-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 28-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் தழுதலையில் 8 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுத்தாறு அணையில் 7 செமீ, விழுப்புரம் மாவட்டம் கெடார், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 6 செமீ, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, வேலூர், மதுரை மாவட்டம் எழுமலை கோவை மாவட்டம் வால்பாறை, சோலையார், சின்கோனா, கடலூர் மாவட்டம் தொழுதூரில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT