பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பஞ்சாமிர்த பிரசாதத்தை ‘அமேசான்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மீண்டும் சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தமிழகக் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் புவிசார் குறியீடு கிடைத்தது பழநி கோயில் பஞ்சாமிர்தத்துக்கு மட்டுமே.
அத்தகைய சிறப்புமிக்க பஞ்சாமிர்தம் தேவஸ்தானம் சார்பில் அரை கிலோ டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும் மற்றும் 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை, பழநி தேவஸ்தானம் மற்றும் இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து அபிஷேக பஞ்சாமிர்தத்தை பக்தர்கள் வீட்டில் இருந்தே பெறும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, https://hrce.tn.gov.in என்ற வலைதளத்திலோ அல்லது அஞ்சல் நிலையத்திலோ பஞ்சாமிர்தக் கட்டணமாக ரூ.145 செலுத்திப் பதிவு செய்தால் தபாலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தனி நபர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள், தேவஸ்தான பஞ்சாமிர்தத்தை மொத்தமாகக் கொள்முதல் செய்து, வியாபார நோக்கத்தில் விற்பனை செய்ய எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை.
இருப்பினும் 5 மாதங்களுக்கு முன்பு அமேசான், இண்டியா மார்ட், மீஸோ போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சட்ட விரோதமாக பழநி கோயில் பஞ்சாமிர்தத்தை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பழநி தேவஸ் தானம் சார்பில் சைபர் கிரைம் போலீஸில் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களும், பக்தர்களும், தனியார் நிறுவன வலைதளங்கள் வழியாகவோ, தனியார் கடைகள் மூலமாகவோ பழநி கோயில் பஞ்சாமிர்தத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கி ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக் கப்பட்டது. தேவஸ்தான புகாரை யடுத்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பஞ்சாமிர்த விற்பனையை நிறுத்தின.
மீண்டும் விற்பனை
இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ‘அமேசான்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனம், பழநி முருகன் ஸ்பெஷல் பஞ்சாமிர்தம் என்ற பெயரில் பழநி தேவஸ்தான பஞ்சாமிர்தத்தையே (அரை கிலோ டின் -2) தள்ளுபடி போக ரூ.229-க்கு விற்பனை செய்து வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாபார நோக்கில் பக்தர்களை ஏமாற்றி சுவாமி பிரசாதத்தை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யும் இதுபோன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது தேவஸ்தானம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.