இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து
சென்னை: “கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஆயுதக் கலாச்சாரத்துக்கும், கும்பல் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்கள் தொடர்ந்து வெட்டிப் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 17-ம் தேதி கொந்தகை கண்மாயில் கணேசன் என்பவரும், 23-ம் தேதி சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, இன்று கீழடி காவல் நிலையம் அருகிலேயே, இளைஞர் கண்ணன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் வெளிப்படுத்துகிறது.
பழிக்குப் பழி, முன்விரோதம், கும்பல் வன்முறை போன்ற காரணங்களால் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஆயுதக் கலாச்சாரத்துக்கும், கும்பல் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று ரவி பச்சமுத்து கூறியுள்ளார்.