தமிழகம்

“பட்டியலில் உங்கள் வாக்குகள் இல்லையெனில்...” - கிறிஸ்தவ மக்களிடம் உதயநிதி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: “வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, நம்முடைய உரிமை. உங்கள் வாக்குகள் பட்டியலில் உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், படிவம் 6-ஐ வழங்கி, மீண்டும் விண்ணப்பியுங்கள்” என்று கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சென்னை கிழக்கு மாவட்டக் கழகம், துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: “பல்வேறு முன்னெடுப்புகளால்தான் இன்றைக்குத் தமிழகம் 11.19 சதவீத வளர்ச்சியோடு வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவிலேயே வளர்கின்ற மாநிலங்களில் முதலிடத்துக்கு வந்திருக்கிறது.

இந்த வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளைப் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் இன்றைக்கு ஒன்றிய பாசிச அரசு நம்முடைய அரசுக்குப் பல்வேறு தொல்லைகளையும், இடையூறுகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் எப்படியாவது தமிழ்நாடுக்குள் இந்தியைத் திணிப்பதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.

சமீபத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலமாகச் குறுக்கு வழியில் எஸ்.ஐ.ஆர் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பாதிப்புகளை நம்முடைய முதல்வர் முதன்முதலில் எடுத்துக் கூறினார். குறிப்பாக, சிறுபான்மையினருடைய வாக்குகள், பெண்களுடைய வாக்குகள், ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்குகள் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் செல்கின்றன. என்ன முயற்சி செய்தாலும், அவை ஒன்றிய பாஜக அரசுக்குக் கிடைக்கவில்லை என்பதால், அவர்களின் வாக்குகளைத் தேடித்தேடி நீக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இந்த எஸ்ஐஆர்.

கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்குகளைத் தமிழகத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இங்கே வந்துள்ள கிறிஸ்தவப் பெருமக்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒரு முக்கியமான வேண்டுகோள்.

வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, நம்முடைய உரிமை. இங்கே வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாக்குகள் பட்டியலில் உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், திமுக பி.எல்.ஓ (BLO)-க்களைச் சந்தித்துப் படிவம் 6-ஐ வழங்கி, மீண்டும் விண்ணப்பியுங்கள். வருகின்ற ஜனவரி 18-ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் உள்ளது. இதனை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வளவு சூழ்ச்சிகளைச் செய்துவிட்டு, டெல்லியில் இருந்துகொண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பிஹார் தேர்தலில் வென்றுவிட்டோம், எங்களது அடுத்த இலக்கு தமிழ்நாடு’ என்று கூறுகிறார். ‘தயாராக இருங்கள்’ என்று நம் முதல்வரைப் பார்த்துச் சொல்கிறார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அடிமைக் கூட்டம் பயப்படலாம்; ஆனால், தமிழக மக்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். வடமாநிலங்களில் நீங்கள் வெற்றி பெறலாம்; ஆனால், உங்கள் பருப்பு தமிழகத்தில் என்றுமே வேகப்போவதில்லை. ஏனெனில், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனித்துவமும் குணாதிசயமும் உள்ளது.

நாங்கள் கிறிஸ்துமஸ் அன்று கேக்கை இஸ்லாமியர்களுக்கும் சேர்த்து அனுப்புவோம். ரம்ஜான் அன்று எங்களுக்குப் பிரியாணி வந்துவிட்டதா என்று முதலில் பார்ப்போம். பொங்கல் அன்று அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம். நீங்கள் என்னதான் மதக் கலவரத்தைத் தூண்டினாலும், உங்கள் முகத்தில் தமிழ்நாட்டு மக்கள் கரியைத்தான் பூசுவார்கள். நம் முதல்வர் சொல்வதுபோல் தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ தான்.

இங்கே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று ‘அமித்ஷா திராவிட முன்னேற்றக் கழகம்’ ஆக மாறிவிட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சிறுபான்மையினரைப் பாதுகாப்பேன் என்று அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. முதலில் உங்கள் கட்சியை பாஜகவிடமிருந்து காப்பாற்றுங்கள்.

சிறுபான்மை மக்களுக்காகவும், உங்கள் பாதுகாப்புக்காகவும் அரணாக இருக்க நம்முடைய திராவிட மாடல் அரசும், முதல்வரும் தயாராக இருக்கின்றனர். நீங்கள் இந்த அரசுக்கு அரணாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சங்கிகளின் முயற்சி என்றைக்கும் தமிழ்நாட்டில் எடுபடாது. அதற்குக் காரணம், நம் முதல்வர் உருவாக்கியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான். தமிழ்நாட்டு மக்கள் நம் கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இது தேர்தலுக்காக உருவான கூட்டணி மட்டுமல்ல, மக்களுடன் தொடர்பு கொண்ட இயக்கம், நம் இயக்கம்.

மத நல்லிணக்கத்திற்கும், மக்களின் ஒற்றுமைக்கும் எதிரான பாசிஸ்ட்டுகளின் அடிமைக் கூட்டத்தை நாம் விரட்டியாக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் காவல் அரணாக இருக்கும். அதிமுக, பா.ஜ.க மீண்டும் தமிழ்நாட்டிற்குள் வந்தால், தொகுதி மறுவரையறை வரும், புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பு என மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோகும். எனவே, நீங்கள் விழிப்போடு இருந்து, வரும் தேர்தல்களில் நம் கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

200 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைப்போம் என முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன் தொடக்கமாக சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருக்கின்ற கொளத்தூர், திரு.வி.க. நகர், எழும்பூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், துறைமுகம் என அனைத்துத் தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியைத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.

SCROLL FOR NEXT