டி.கே.எஸ்.இளங்கோவன் 
தமிழகம்

“விஜய்யால் ஆட்சியமைக்க முடியாவிட்டால் நாங்கள் ஆலோசித்து முடிவெடுப்போம்” - டி.கே.எஸ்.இளங்கோவன்

வெற்றி மயிலோன்

சென்னை: “விஜய்யால் ஆட்சி அமைக்க இயலாவிட்டால், நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்து, எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்” என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சியமைக்க முடியாமல் திணறும் நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்ற யூகங்கள் பலமாக வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இதுபற்றி எனக்குத் தெரியாது. தற்போதைக்கு அத்தகைய எண்ணம் எதுவும் இல்லை. தவெகவுக்கு ஆளுநர் 10-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளார். நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய்யால் ஆட்சி அமைக்க இயலாவிட்டால், நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்து, எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.

தவெகவிடம் 112 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதன் பிறகுதான் நாம் ஒரு மாற்று வழியைப் பற்றிச் சிந்திக்க முடியும்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT