டிடிவி தினகரன்

 
தமிழகம்

“தவெகவின் தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால்...” - தினகரன் எச்சரிக்கை

வெற்றி மயிலோன்

சென்னை: ‘தவெகவின் தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த தவெக, ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.

தவெகவின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரை பேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவெகவின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT