தமிழகம்

“என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின்

வெற்றி மயிலோன்

புதுக்கோட்டை: “என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டை மீண்டும் இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவார்கள். தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பாஜக.வின் வழக்கம். அதற்குத் துணை போவதுதான் அ.தி.மு.க.வின் பழக்கம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம்: புதுக்கோட்டைக்கு என்று பெரிய வரலாறு இருக்கிறது. இங்கு இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். கீரனூர் முத்து மற்றும் விராலிமலை சண்முகம். 1965-இல் தாய்த்தமிழைக் காப்பதற்காக தங்களின் உயிரையே தந்த இளைஞர்கள் அவர்கள். தமிழுக்கு மீண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஆபத்து வந்திருக்கிறது. அந்த பா.ஜ.க.வையும் – அவர்களை தூக்கி சுமக்கும் அடிமை அ.தி.மு.க.வையும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன்.

          

இந்தத் தேர்தல் என்பது, எதற்கான தேர்தல்? இந்தத் தேர்தலில் வெல்லப்போவது யார், தமிழ்நாடா? டெல்லியா? தமிழ்நாட்டுக்கு எது தேவை? மக்களாட்சியா? சர்வாதிகாரமா? இதை நீங்கள், ஏப்ரல் 23 அன்றைக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காட்ட வேண்டும்; நிரூபிக்க வேண்டும். கிரிக்கெட்டில் பல பிளேயர்ஸ், பல ரெக்கார்டுகளை வைத்திருப்பார்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தீர்கள் என்றால், அவரிடம் அனைத்து ரெக்கார்டுமே இருக்கும்! அரசியலில் அப்படிப்பட்ட முறியடிக்க முடியாத அனைத்து ரெக்கார்டும் தி.மு.க.தான் செய்திருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கிறேன். இனியும் தொடர்ந்து நாம்தான் ரெக்கார்டு பிரேக் செய்யவும் போகிறோம்.

நம்முடைய திட்டங்களைப் பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன், ஒன்றிய அரசே காப்பி அடித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில், தி.மு.க.தான் ஒரிஜினல். ஆனால், இத்தனையும் செய்து கொண்டிருக்கும் இந்த ஸ்டாலின், கொரோனாவில் போயிருக்க வேண்டும் என்று பழனிசாமி வன்மத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த ஸ்டாலின் இருந்து, என்னுடைய மக்களுக்கு இன்னும் ஏராளமான திட்டங்களை செய்யத்தான் போகிறேன்; அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

தமிழ்நாட்டை இன்றைக்கு இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி பெற்ற மாநிலமாக, நம்முடைய திராவிட மாடல் உயர்த்தியிருக்கிறது. இந்த அடித்தளத்தில் இருந்து, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதிய உயரங்களுக்கான பயணத்தை தொடங்கப் போகிறோம். அதற்கான திட்டமாகத்தான் ‘சூப்பர்ஸ்டார்’ வந்திருக்கிறார். “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா… சின்னக் குழந்தைகள்கூட சொல்லும்”. அதுதான் நம்முடைய தேர்தல் அறிக்கை. இந்த ஸ்டாலின் சொன்னால், சொன்னதை செய்வான். நான் கலைஞரின் மகன். சொன்னதை மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன். ஆனால், பா.ஜ.க.வின் கிளைக் கழகச் செயலாளராக இருக்கும் பழனிசாமி அவர்களால், இப்படி ஏதாவது சாதனைகளை சொல்லி, வாக்கு கேட்க முடியுமா?

எங்கேயாவது, அவர் சாதனைகளை சொல்லி, பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, கொள்கைகளைப் பற்றி பேசி பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, மாநில உரிமைகளுக்கு பழனிசாமி குரல் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏன் என்றால், பாதம்தாங்கி பழனிசாமியிடம் கொள்கைகளும் இல்லை; சாதனைகளும் இல்லை. அதனால்தான், சாக்கடைக்கு சமமான சொற்களையும், அவதூறுகளையும் பேசி, அவர் ஒரு தரமற்றவர் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

என்டிஏ எனும் பேரிடரை, தமிழ்நாட்டுக்குள் பின்வாசல் வழியாக கொண்டு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதன்மை அடிமைதான், பழனிசாமி அவர் பழனிசாமி இல்லை. ஆமாம்சாமி அடிமைசாமி. அ.தி.மு.க. எந்தக் கூட்டணியில் அடிமை சாசனம் எழுதி கொடுத்து சேர்ந்திருக்கிறது. அன்னைத் தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்யும் என்டிஏ கூட்டணியில் சேர்ந்திருக்கிறது. அந்தக் கூட்டணி டெல்லியில் வைத்து முடிவு செய்யப்பட்ட கூட்டணி! அனைவருக்கும் தெரியும். ஊழல்வாதிகளும் - தேர்ந்த துரோகிகளும், காவி கும்பலை தோளில் சுமந்து கொண்டு வருகிறார்கள்.

நேற்றுகூட, பா.ஜ.க.வில் இருக்கும் ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்? தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று பேசியிருக்கிறார். அடிமைசாமியான பழனிசாமி இதற்கு ஏதாவது பதில் சொன்னாரா? என்ன சொல்வார்? ஒன்றும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டுக்கு வரும் பா.ஜ.க. அமைச்சர்கள் எல்லாம் என்னவெல்லாம் பேசிவிட்டு போகிறார்கள் என்று பத்திரிகைகளில், டி.வி.யில், செய்திகளில் வருகிறது. அனைத்தையும் பார்க்கிறீர்கள். அமைச்சராக இருக்கக்கூடிய பியுஷ் கோயல் – அமைச்சராக இருக்கக்கூடிய தர்மேந்திர பிரதான் என்று இங்கு வருபவர்கள் எல்லாம், இந்தித் திணிப்புக்கு ஆதரவாக மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து அடிமைசாமி ஏதாவது குரல் கொடுத்திருக்கிறாரா?

ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதானின் வேலை என்ன? கல்வியை வளர்ப்பதில்லை; கல்வியை காவிமயமாக்கினார்! இந்தியைத் திணிக்க மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவிட்டு செல்கிறார். இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நம்முடைய குழந்தைகளின் படிப்புக்கு கொடுக்க வேண்டிய, இரண்டாயிரம் கோடி ரூபாய் கல்வி நிதியை கொடுக்காமல் தடுப்பது! இதெல்லாம்தான், அவரது வேலை.

மும்மொழித் திட்டத்தை செயல்படுத்துங்கள், இரண்டாயிரம் கோடியை தருகிறோம் என்று அமைச்சர் பிரதான் சொன்னார். இரண்டாயிரம் கோடி இல்லை; பத்தாயிரம் கோடியே கொடுத்தாலும், இந்தியைத் திணிக்க அனுமதிக்க மாட்டேன். எங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவையும், ஆசிரியர்களுக்கான சம்பளத்தையும் நானே கொடுத்துக் கொள்கிறேன் என்று உறுதியாக சொன்னவன் தான், இங்கே உங்கள் முன்னால் நிற்கின்ற ஸ்டாலின். இதுவே அடிமைசாமியாக இருந்தால், எதிர்த்து குரல் கொடுத்திருப்பாரா? இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்ட கால செயல்திட்டங்களின் ஒரு பகுதி.

எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்றால், நம்முடைய குழந்தைகள் கல்வி நிலையங்களைவிட்டு வெளியேற வேண்டும்; அறிவியல்பூர்வமாக சிந்திப்பதை நிறுத்த வேண்டும்; வாட்ஸ்அப் வதந்திகளையும், பிற்போக்குத் தனங்களையும் நம்ப வேண்டும்; அப்போதுதான் அந்தக் காலம் போன்றே நாம் முன்னேறாமல் முடங்கிக் கிடப்போம்; ஒரு சிலர் மட்டும் வாய்ப்புகளை தட்டிப் பறித்து, முன்னேறுவார்கள். இதுதான், அவர்களின் திட்டம்; அவர்களின் எண்ணம். இதற்கான செயல்திட்டங்களுக்கு எல்லாம் ஆமாம்சாமி போடும் முரட்டு அடிமையாக வாய்த்திருப்பவர்தான், இந்த அடிமைசாமி! அடுத்தடுத்த துரோகங்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்தான், என்டிஏ கூட்டணி.

பழனிசாமிக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டு மேல் அக்கறை இருந்தால், தர்மேந்திர பிரதான் தொடங்கி, அமித் ஷா - மோடி வரைக்கும் மேடையில் உட்கார வைத்து, “இது தமிழ்நாடு! இங்கு அண்ணா வகுத்துக் கொடுத்த இருமொழிக் கொள்கை மட்டும்தான் இருக்கும்” என்று ஆணித்தரமாக பேச முடியுமா அவரால்? ஒரு அடிமையால் ஓனரை எதிர்த்து பேச முடியாது. பிரதமர் மோடியை பார்த்து, “தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் - ‘வணக்கம்’, ‘நன்றி’ என்று மட்டும் சொல்லி, தமிழில் பேச முடியவில்லை என்று வருத்தப்படுவதாக” சொல்கிறீர்களே, பிறகு ஏன், தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிகமாக நிதி வழங்குகிறீர்கள் என்று கேள்வி கேட்பாரா, இந்த அடிமை பழனிசாமி?.

அமித்ஷா அவர்களைப் பார்த்து, “சமஸ்கிருதம்தான், அனைத்துக்கும் மூலமொழி” என்று நீங்கள் சொல்வது தவறு என்று பழனிசாமியால் வாதிட முடியுமா? அதற்கான முதுகெலும்பு பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரை சும்மா ஒன்றும் ஆமாம்சாமி, அடிமைசாமி என்று சொல்லவில்லை. எதற்கெல்லாம் ஆமாம்சாமி போடுகிறார்?. குடியுரிமைத் திருத்தச் சட்டம்! அவர் நினைத்திருந்தால் அவர்கள் எம்.பி.க்கள் ஆதரிக்காமல், அதை தடுத்திருக்க முடியும். ஆனால், ஆமாம்சாமி போட்டு இசுலாமியர்களுக்கு துரோகம் செய்தார். அதேபோன்று, வக்பு திருத்தச் சட்டத்தையும் ஆதரித்து, சிறுபான்மையினருக்கு துரோகம் செய்தார் அடிமைசாமி. அடுத்து, கிறிஸ்தவர்களுக்கு எதிராக F.C.R.A. சட்டம் கொண்டுவரப் போகிறார்கள். கூட்டணியில் இருக்கும் பழனிசாமி, தேர்தலுக்காகவாவது அதை எதிர்த்து பேசியிருக்கிறாரா?.

அடுத்து, நீட் தேர்வை பற்றி பேசுகிறார். நீட் தீர்மானத்தை ஒன்றிய அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலமாக மறைத்து வைத்தவர்தான் பழனிசாமி. அந்த மாதிரி துரோகம் எல்லாம் யாரும் பண்ணவில்லை. உடனே, நாங்கள் என்ன பண்ணோம் என்று கேட்பார்… நான் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறேன். நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருந்திருக்காது. அதற்கான உறுதியை பிரதமர் வேட்பாளராக இருந்த ராகுல் காந்தியே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மோடியை பார்த்து, “தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தாருங்கள்” என்று அடிமைசாமியால் கேட்க முடியுமா?. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டப்பூர்வமாக நாங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். கொள்கையை விற்று பிழைக்கும் அடிமைசாமி கூட்டத்துக்கு சுயமரியாதை உணர்வும் இருக்காது; மாநில உரிமைகளும் புரியாது.

இப்போதுகூட, நாடு முழுவதும் மக்கள், “மோடி ஜி, Where is L.P.G.” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல ஹோட்டல்களை இழுத்து மூடிவிட்டார்கள். பல ஹோட்டல்களில் மெனுவை குறைத்துவிட்டார்கள். பல ஹோட்டல்களில் விலையை ஏற்றிவிட்டார்கள். இதனால், உணவுக்காக ஹோட்டல்களை நம்பியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் முழுவீச்சில் சரிசெய்ய முயற்சிக்காமல், சிலிண்டர் விலையை 200 ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். அதுவும் சரியாக வழங்கப்படுவதில்லை. இதையெல்லாம் எதிர்த்து பழனிசாமி குரல் கொடுத்திருக்கிறாரா? அதனால்தான், அவரை அடிமைசாமி என்று சொல்கிறோம். துரோகத்தில் டாக்டரேட் வாங்கும் அளவுக்கு அனைவருக்கும் இவ்வளவு துரோகம் செய்துவிட்டு, வாய் கூசாமல் பொய்யாய் பேசிக் கொண்டிருக்கிறீர்களே பழனிசாமி.

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பா.ஜ.க.வின் வழக்கம்! அதற்குத் துணை போவதுதான் அ.தி.மு.க.வின் பழக்கம்! இவர்களின் அத்தனை துரோகங்களையும் கடந்துதான், நாம் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு வரும் என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டை மீண்டும் இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT