சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த ரவுடியை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்த சம்பவம், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தினார்.
அதன்படி மருத்துவமனை டீன் கவிதா, ஆர்எம்ஏ வாணி எடுத்த நடவடிக்கையின்படி, நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு, பார்வையாளர் நேரத்தில் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டீன் கவிதா, ஆர்எம்ஓ வாணி கூறுகையில், ``மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உதவியாளருக்கு ஏற்கெனவே அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதில் நோயாளி பெயர், வயது, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
ஒரு நோயாளிக்கு ஒரு நபர்: தற்போது நோயாளியை சந்திக்க வரும் மற்ற நபர்களுக்கும், நோயாளி சிகிச்சை பெறும் துறை சார்ந்த குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது'' என்றார்.