செல்வப்பெருந்தகை

 
தமிழகம்

“தேர்தல் முடிந்தபிறகு தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்” - செல்வப்பெருந்தகை உறுதி

டெக்ஸ்டர்

சென்னை: தேர்தல் முடிந்தபிறகு காங்கிரஸ் மாநில தலைவர் பதவியிலிருந்து விலக இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தேர்தல் முடிந்தபிறகு என்னுடைய பணி முழுக்க முழுக்க ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்கு மட்டும்தான். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

          

கட்சித் தலைமையிடம் பேசிவிட்டு நான் தொகுதிப் பணி, தமிழக பணி மட்டும்தான் பார்க்கப் போகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றியை பெற்றுத் தந்தோம். இந்த தேர்தலில் நூறு விழுக்காடு வெற்றியை தரப் போகிறோம். 

ஒவ்வொரு மனிதனும் பதவியில் இருந்து விலகும்போது மனநிறைவோடு விலக வேண்டும். நான் தேர்தல் முடிந்தபிறகு மனநிறைவோடு விலக இருக்கிறேன். எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் என்ன செய்திருக்கிறேன் என்று எங்கள் தலைவர்களுக்கு தெரியும்.” இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார். 

முன்னதாக இன்று (ஏப். 03) காலை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

பொன்னேரி (தனி) தொகுதியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஆசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூரில் (தனி) செல்வப்பெருந்தகை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சோளிங்கரில் ஏ.எம். முனிரத்தினம், ஊத்தங்கரையில் (தனி) குப்புசாமி, கிருஷ்ணகிரியில் செல்ல குமார், பென்னாகரத்தில் ஜி.கே.எம். தமிழ் குமரன், ஆத்தூரில் (தனி) எஸ்.கே. அர்த்தனாரி, ஈரோடு(கிழக்கு) தொகுதியில் கோபிநாத் பழனியப்பன், உதகமண்டலத்தில் பி. ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கவுண்டம்பாளையத்தில் சூர்ய பிரகாஷ், சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு, துறையூரில் (தனி) விச்சு லெனின் பிரசாத், கடலூரில் சந்திரசேகரன், மைலாடுதுறையில் ஜமால் யூனுஸ் முகம்மது ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT