தமிழகம்

“தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால்

த.அசோக் குமார்

தென்காசி: “பனை ஏறும் தொழிலாளியை காலில் சுட்டுள்ளார்கள். நான் கள் இறக்குகிறேன். மீண்டும் தேதி குறித்து கள் இறக்குவேன். என்னை வந்து சுடுங்கள் பார்க்கலாம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலங்குளத்தில் இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: உங்களுக்கு சாதிக்கான தலைவன் வேண்டுமா, சாதிக்க துடிக்கும் தலைவன் வேண்டுமா?. நாட்டை ஆள்பவன் இறைவனைப்போல் இருக்க வேண்டும். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க தகுதி இல்லாதவர்கள் காசு கொடுத்து வாக்கை வாங்குகிறார்கள். உரிமையை ஒருபோதும் இழக்கக் கூடாது.

          

காசு இல்லாததால் தொடர்ந்து நான் தோற்றுத் தோற்று நிற்கிறேன். என்றைக்கு என்னை உணர்கிறீர்களோ அன்றைக்கு என்னை வெல்ல வைத்தால் போதும். நான்கு முறை நான் போட்டியிட்டுள்ளேன். ஆனால் நான் தோற்கவில்லை. நீங்கள்தான் தோற்றுப்போனீர்கள். தோல்விக்கு பயந்து 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை. சாதி, மதத்தை சொல்லி நான் வாக்கு கேட்கவில்லை. தமிழன் என்ற இனத்தை சொல்லி வாக்கு கேட்கிறேன். நான் வாக்குக்கு காசு கொடுக்க மாட்டேன். ஆனால், ஆகச்சிறந்த வாழ்க்கையை தருவேன்.

அதிமுக ஆட்சியில் தந்தை, மகனை அடித்து கொன்றார்கள். இப்போது பனை ஏறும் தொழிலாளியை காலில் சுட்டுள்ளார்கள். நான் கள் இறக்குகிறேன். மீண்டும் தேதி குறித்து கள் இறக்குவேன். என்னை வந்து சுடுங்கள் பார்க்கலாம். நான் வென்று வருவேன். துப்பாக்கியால் சுட்டவர்களை அதே பனையில் கட்டி வைத்து, பச்சை மட்டையால் அடிப்பேன்.

தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடச் சொன்னது யார்?. தந்தை, மகனை அடித்து கொன்றது யார்?. பனை தொழிலாளியை சுடச் சொன்னது யார்?. இவர்களுக்கு மானங்கெட்டு ஓட்டு போடப் போகிறீர்களா?.

கள்ளச்சாராயம் காய்ச்சியவனை சுடாதவர்கள், பதநீர் இறக்குகிறவனை சுடுகிறார்கள் என்றால் நோக்கம் என்ன?. துப்பாக்கியால் சுட்டவரை டிஸ்மிஸ் செய்யாத இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்வோம்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கும், நடிகனை பார்க்கச் சென்று நெரிசலில் சிக்கி இறந்தவருக்கும் ரூ.10 லட்சம் கொடுத்தார்கள். 2 கால்களிலும் சுடப்பட்டவரின் குடும்பத்துக்கு என்ன கொடுத்தீர்கள்? அவரது குடும்பத்துக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மக்களிடம் கையேந்தியாவது அந்த குடும்பத்தை காப்பாற்றுவேன். நான் வென்று வருவேன். நான் டாஸ்மாக்கை மூடுவேன், பனை, தென்னை, ஈச்ச மர கள் இறக்குவதை திறந்து விடுவேன்.

தேர்தலில் உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள். இதுதான் உங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. யார் நல்லாட்சி கொடுத்தது, யார் நல்லாட்சி கொடுக்கப் போகிறார் என இரண்டே பேருக்குத்தான் போட்டி. காமராஜர் நல்லாட்சி கொடுத்தார். அவரை விட சிறந்த ஆட்சியை நான் கொடுப்பேன். எனக்கு ஓட்டு போடுங்கள், போடாமல் போங்கள். ஆனால் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள்.

தியேட்டரில் விசில் அடித்து, தெருவிலும் விசில் அடித்துத் திரியாதீர்கள். ரோடுஷோ பார்த்து மயங்காதீர்கள். இதுவரை என்னோடு நீ நிற்கவில்லை. இனியாவது என்னோடு நில்லுங்கள் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பாவூர்சத்திரம், கடையநல்லூர் பகுதிகளில் தென்காசி மற்றும் கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.

SCROLL FOR NEXT