காரைக்குடி: “நான் யாருக்கும் ரூ.1,000 கொடுக்க மாட்டேன். மாறாக, உள்ளூரிலேயே ரூ.5,000 வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்வேன்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி வேட்பாளருமான சீமான், தேவகோட்டை, காரைக்குடியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியது: “வீடுகளை வாடகைக்கு பிடித்துக் கொடுப்பவர் வீட்டுத் தரகர். வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை கொண்டு வருபவர் நாட்டுத் தரகர்.
400 ஆண்டுகளுக்கு முன்பு வணிகம் செய்ய வந்து நாட்டை பிடித்துக் கொண்டனர். அவர்களை விரட்டி அடித்துவிட்டோம். தற்போது அவர்களை மீண்டும் வா, வா என்று அழைக்கின்றனர். உழைப்பை சுரண்டி லாபத்தை எடுத்துச் செல்லத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் வருகின்றன. சேவை எல்லாம் தனியாரிடம் உள்ளது. அதை அரசிடம் கொண்டு வருவேன். அரசியல், கல்வி எல்லாமே வியாபாரமாகிவிட்டது.
காசு கொடுத்தவர்கள் கருத்துக் கணிப்பில் முந்துகின்றனர். நான் காசு கொடுப்பதில்லை, அதனால் எப்போதும் பின்தங்கியே இருப்பேன். தேர்தல் முடிவு வரும்போது நான் முந்துவேன்.
நான் யாருக்கும் ரூ.1,000 கொடுக்க மாட்டேன்; உள்ளூரிலேயே ரூ.5,000 வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்வேன். மற்ற அரசியல்வாதிகள் மக்களை வாக்கு என்று பார்க்கின்றனர்; நான் உயிராக பார்க்கிறேன்.
வாக்கை எப்படி வாங்குவது என்று அவர்கள் சிந்திக்கின்றனர். நான் உங்களை காப்பாற்றுவது குறித்து சிந்திக்கிறேன். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி வரக்கூடாது என நினைத்தால் எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று சீமான் பேசினார்.