தமிழகம்

“அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” - சீமான்

அ.அருள்தாசன்

நெல்லை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “பொது வேட்பாளர் என்ற கருத்தே தவறானது. அனைத்து சாதியினருக்கும் நான் பொது வேட்பாளர்தான்.

பிரபாகரனை எனது சொந்த அண்ணன் என்று கூறியதற்காக என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளேன். என் மீது 260 வழக்குகள் உள்ளன. வழக்குகள் எனக்குப் புதிதல்ல.

எங்களுக்கு தோல்வி இல்லை, மக்களுக்குத்தான் தோல்வி கிடைத்துள்ளது. இப்போது நல்லாட்சி கிடைத்துள்ளதா? இலவச அறிவிப்புகள் பெயரில் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். நான் தங்க மோதிரம் இலவசமாக தரமாட்டேன். தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவேன்.

இங்கு ஆட்சி மாறியது. ஆனால், ஆட்சி முறை மாறவில்லை. இந்தத் திட்டத்துக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்குகிறார்கள். இது திட்டமில்லை, வெற்று கவர்ச்சி அறிவிப்பு.

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். கடத்தப்படுகிறார்கள். சிங்கப்பெண் படையினர் எங்கே சென்றார்கள்?

அமைச்சர் விஸ்வநாதனை பதவியை விட்டு எடுத்துவிட்டால், தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடைபெறுவதாக கூறமாட்டார். வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. திட்டத்துக்கு பல கோடியில் பதாகை வைத்து காமராஜர் விளம்பரப்படுத்தினாரா? தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடப்பதாக அவரை கேவலப்படுத்த கூடாது. இந்த ஆட்சியில் தொலைநோக்கு திட்டம் எதுவும் கிடையாது. திமுக, அதிமுக செயல்படுத்திய திட்டங்களையே செயல்படுத்துகிறார்கள். பழைய திட்டங்களுக்கு முன் வெற்றி என்று போட்டுக் கொள்கிறார்கள்.

சிறையில் இருந்து 17 பேர் தப்பியுள்ளனர். திறந்தவெளி சிறையில் நாங்கள் இருக்கிறோம். தப்பிக்க முடியவில்லை. தமிழகத்தில் அறிவார்ந்தவர்களை அமைச்சர்களாக தேர்ந்தெடுத்தது யார்? மாற்றம் என்பது எது சொல்லா, செயலா? நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? என்னுடைய கொள்கை இது என்று சொல்ல முடிந்துள்ளதா?

60 ரூபாய்க்கு விற்ற அரிசி ரூ.120-க்கு விற்பனை செய்வதை எதிர்பார்த்தீர்களா? மின்கட்டணம் உயர்ந்துள்ளதே, 8 மணிநேரம் மின்தடை உள்ளதே இந்த மாற்றத்தை எதிர்பார்த்தீர்களா?

இடைத்தேர்தலில் முதல்வருக்கு மொத்த அமைப்பும் வேலை செய்கிறது. ஆனால், எல்லாருக்கும் சம வாய்ப்பு இல்லையே. முதல்வராக இருந்து தேர்தலை சந்திக்கிறார். நாங்கள் சாதாரண மக்களாக இருந்து தேர்தலை சந்திக்கிறோம்.

முதல்வராகும் முன் நடிகராக இருக்கும்போது மக்களோடு மக்களாக பயணித்த விஜய், முதல்வரான பின் தனி விமானத்தில் பயணம் செய்கிறார். இது யாருடைய பணம்? மக்கள் பணத்தை எடுக்க மாட்டேன் என்றார். ஆனால், அவர் வரும் இடங்களில் பல நூறு கோடியில் பேரிகார்டுகளை அமைக்கிறார்கள். எந்த கேள்வியும் இவர்களை கேட்க கூடாது. கேள்வி கேட்டால், அதை விமர்சனம் செய்வதாக கூறுகிறார்கள். ஜீரோ கட்சி என்று கூறிவிட்டு எங்கள் மீது ஏன் உங்களுக்கு பயம்?

17 கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் சென்றதற்கு சிறைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பதவி விலகுவாரா? ரூ.150 கோடி போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். கண்துடைப்பு நடவடிக்கைகளையே எடுக்கிறார்கள். பெண்களை பெண்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தே தவறு.

5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். அம்பாசமுத்திரம் தொகுதியில் மட்டுமில்லை, எப்போதும் எல்லா இடங்களிலும் நான் பொது வேட்பாளர். எல்லாருக்கும் நாங்கள் பொது வேட்பாளர்கள்.

பொது வேட்பாளர் என்ற கருத்தே தவறானது. அனைத்து சாதியினருக்கும் நான் பொது வேட்பாளர்தான். கடந்த 16 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடுகிறோம். தோல்வியுற்றேன், ஆனால் துவண்டுவிடவில்லை.

திரைக் கவரச்சி என்பது மங்கும். இன எழுச்சி அரசியல் எழும். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டுதான் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சீமான் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT