நல்லகண்ணுவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பழ.நெடுமாறன் | கோப்புப் படம்

 
தமிழகம்

“காமராஜரின் நற்குணங்களை நல்லகண்ணுவிடம் கண்டேன்” - பழ.நெடுமாறன் நேர்காணல் | நினைவுக் குறிப்புகள்

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர். நல்லகண்ணு தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட ‘அறவாழ்வின் அடையாளம்' நூலுக்காக ஆர்.நல்லகண்ணு குறித்த தகவல்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பகிர்ந்து கொண்டார். ஆர்.நல்லகண்ணுவின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக, அந்த நேர்காணல் இங்கே மறுபகிர்வாக...

ஆர்.நல்லகண்ணு மீது உங்களுக்குப் பெரும் மதிப்பு உருவாகக் காரணம் என்ன?

1980களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ப.மாணிக்கமும், துணைச் செயலாளராக ஐயா நல்லகண்ணுவும் இருந்தனர். அப்போது முதல் அவருடன் பழகி வருகிறேன். அவரது எளிமை, அனைவரிடத்திலும் இனிமையாக பழகுவது போன்றவற்றைப் பார்த்து வியந்திருக்கிறேன். தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களிலேயே அதிகக் காலம் சிறையில் இருந்தவர்கள் பாலதண்டாயுதமும், நல்லகண்ணுவும்தான்.

1992ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார். அந்தக் கட்சியின் விதிகளின்படி இரண்டு முறை மட்டுமே, அதாவது அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை மட்டுமே ஒருவர் மாநிலச் செயலாளராக இருக்க முடியும். ஆனால், நல்லகண்ணு மட்டும்தான் 2005ஆம் ஆண்டு வரை 13 ஆண்டு காலம் அக்கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார். இவருக்காகவே அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு, விதிகளில் திருத்தம் செய்து விலக்கு அளித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நல்லகண்ணு எவ்வளவு தேவையானவர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற பல காரணங்களால் எனக்கு நல்லகண்ணு மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உருவானது.

          

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நீங்களும் நல்லகண்ணுவும் இணைந்து பல போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள். அது பற்றி...

ஈழத் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் நல்லகண்ணுவுக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. அகில இந்தியக் கட்சிகளில் முதன்முதலில் ஈழத் தமிழர் பிரச்சினையில் முழுமையாக ஈடுபாடு காட்டியதும், அப்பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்து கொண்டதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. அந்தக் கட்சிக்கு இத்தகைய புரிதல் ஏற்பட நல்லகண்ணுவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

2008ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு தேசிய கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இப்படியான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கான முழுப் பொறுப்பும் ஐயா நல்லகண்ணு அவர்களையே சாரும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நடத்துவதில் கூட தமிழ்நாட்டில் நீண்ட காலம் தயக்கமும் தொய்வும் இருந்தது. இந்த தயக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடூரங்களை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை நான்தான் தொடங்கி வைத்தேன். அன்றைக்கு நாள் முழுவதும் அங்கேயே இருந்தேன். விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நிலைப்பாடு எடுத்ததும் அப்போதுதான். இதற்கெல்லாம் நல்லகண்ணு போன்ற தலைவர்கள்தான் காரணம்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கினீர்களே...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் 2009ஆம் ஆண்டு உச்ச நிலையைத் தொட்ட நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டுப் போராடுவதற்குக் கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஈழத் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்துவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அந்தந்தக் கட்சி அலுவலகங்களுக்குச் சென்று நான் சந்தித்தேன். அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கும் சென்றேன்.

நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் ஆகியோரிடம் இலங்கை நிலவரம் குறித்தும், இங்கே ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தவது பற்றியும் விவாதித்தேன். இது பற்றி அவர்கள் ஏற்கெனவே விவாதித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் எனது வேலை சுலபமாகி விட்டது. ஓர் அமைப்பு ஏற்படுத்துவதில் எங்களுக்கும் உடன்பாடுதான்; இதனை உடனே செய்தாக வேண்டும் என்று தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவானது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றதன் மூலம் அந்த அமைப்புக்கு ஒரு பெரிய மதிப்பைத் தேடிக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். மதிமுக, பாமக, விசிக போன்ற கட்சிகள் ஏற்கெனவே ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாடுடைய கட்சிகள்தான். எனினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த அமைப்புக்கு வந்ததன் மூலம் மேலும் பல கட்சிகள், கட்சி சாரா அமைப்புகள் ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்ளவும், அதற்கான போராட்டங்களில் பங்கேற்கவும் வழிகாட்டியாக அமைந்தது. பல கட்சிகளையும், அமைப்புகளையும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைப்பதில் ஐயா நல்லகண்ணு அவர்கள் பெரும் பங்களிப்பு செய்தார்.

அது மட்டுமல்ல; உலக நாடுகள் மத்தியிலும் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான பார்வையில் மாற்றம் ஏற்பட தமிழ்நாடு கம்யூனிஸ்ட் தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். 2009 காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த 20 நாடுகளில் ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகளும் இருந்தன. அந்த நேரத்தில் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பாண்டியன் அந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் மூலமாக இலங்கை பிரச்சினையின் உண்மைத் தன்மையை கியூபா கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதை தா.பாண்டியனிடம் நல்லகண்ணு ஐயா எடுத்துரைத்தார். அதேபோல் கியூபா சென்ற தா.பாண்டியனும் அவ்வாறே பேசினார். இதன் காரணமாக இலங்கை அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை கியூபா விலக்கிக் கொண்டது. நடுநிலைமை என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டார்கள். இவையெல்லாம் மாபெரும் பணிகள்.

நீங்கள், நல்லகண்ணு ஆகிய இருவரது செயல்பாடுகளும் பாசாங்கு இல்லாத தன்மைகளோடு, சாதாரண மக்களுக்கான மொழியில் இருக்கிறதே. இந்தப் பொருத்தப்பாட்டுக்குக் காரணம் என்ன?

பல விசயங்களில் எங்கள் இருவருக்கும் இடையே கருத்தொற்றுமை உண்டு. பெருந்தலைவர் காமராஜரால் வளர்க்கப்பட்டவன் நான். எளிமை, தொண்டுள்ளம், மக்களுக்காகத் தன் வாழ்வை முழுமையாக ஒப்படைத்தல் போன்ற அருங்குணங்களைத் தலைவர் காமராஜரிடம் நான் கண்டேன். அவருக்குப் பிறகு அந்த நற்குணங்கள் அனைத்தும் நல்லகண்ணு ஐயாவிடம் இருப்பதையும் நான் கண்டேன். என்னைப் பொறுத்தமட்டில் இன்றைக்கு வாழும் காமராஜராக நல்லகண்ணு திகழ்கிறார். மக்களை எவ்வாறு அணுக வேண்டும், மக்களிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பதற்கு ஐயா நல்லகண்ணு அவர்கள்தான் எனக்கு முன்னோடி.

கரூர் அருகே அகன்ற காவிரி பகுதியில் ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க நாங்கள் இருவரும் அந்தப் பகுதிக்குப் பயணம் செய்து போராட்டம் நடத்தினோம். இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம், கூடங்குளம் போராட்டம் எனப் பல போராட்டங்களில் நாங்கள் இருவரும் இணைந்து போராடியிருக்கிறோம். எங்களுக்கு இடையே இவ்வாறு இயற்கையாகவே பல ஒற்றுமைகள் இருக்கின்றன.

இந்திய தேசியத்திலிருந்து தமிழ் தேசியத்துக்கு வந்தவர் நீங்கள்; பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வந்தவர் நல்லகண்ணு. ஆனால் தமிழ், தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் இருவரும் ஓரணியில் இருக்கிறீர்களே. இது எப்படி?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளிலேயே மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். சோவியத் ஒன்றியத்தை லெனின் அமைக்கும்போதே, அங்கிருந்த 13 மாநிலங்களுக்கும் குடியரசு அந்தஸ்தும், தனி நாடாக பிரிந்து போகும் அதிகாரத்துடன் கூடிய தன்னாட்சி அதிகாரமும் வழங்கினார். அதையேதான் இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னுடைய கொள்கையாக வைத்திருக்கிறது. அதனால் நானும் நல்லகண்ணுவும் தமிழ், தமிழர் நலன் சார்ந்த விசயங்களில் இணைந்து செயல்படுவதில் வியப்படைய எதுவும் இல்லை.

அரசியல் கலாச்சாரம் மாறி வருகிறது. இனி வரும் காலத்தில் நல்லகண்ணு, உங்களைப் போன்ற தலைவர்கள் வர வாய்ப்புள்ளதா?

நீங்கள் எங்கள் தலைமுறையைப் பார்க்கிறீர்கள். நாங்கள் எங்களுக்கு முந்தைய தலைமுறையைப் பார்க்கிறோம். ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ம.பொ.சி. போன்ற தலைவர்கள் வாழ்ந்த காலம் அது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி இருந்தது. கொள்கை இருந்தது, கோட்பாடுகள் இருந்தன. எனினும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், தங்களுக்கு இடையேயான கொள்கை வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழர் நலன், தமிழ்நாட்டு நலனுக்காக ஒற்றுமையாக, ஒரே குரலில், உரக்கக் குரல் எழுப்புவார்கள். அதுபோன்ற தருணங்களில் அவர்களிடையே எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியாது. அரசியல் ரீதியான கருத்து மாறுபாடுகள் இருந்தபோதிலும், ஒருவரையொருவர் மதித்தார்கள்.

நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜாஜி அவர்கள் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட காமராஜர் உடனடியாக அங்கு சென்றுவிட்டார். அவருடன் நானும் சென்றிருந்தேன். நீண்ட நேரம் ராஜாஜியின் உடல் அருகே மவுனமாக நின்று அஞ்சலி செலுத்தினார் காமராஜர்.

பின்னர் அங்கிருந்த தலைமைச் செயலாளர் சபாநாயகத்தைக் கூப்பிடும்படி என்னிடம் கூறினார். தலைமைச் செயலாளர் அருகில் வந்தவுடன், “பெரியவர் கவர்னர் ஜெனரலாக இருந்தவர். அவருக்கு இறுதியாக ராணுவ மரியாதை செய்யப்பட வேண்டும். இது பற்றி டெல்லி அரசுக்குச் செய்தி அனுப்பி விட்டீர்களா?” என்று கேட்டார். தலைமைச் செயலாளர் பதறிப் போய்விட்டார். “இன்னும் சொல்லலை அய்யா. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு அந்தப் பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார்.

முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள் அனைவரும் அங்கு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் திடீரென ஒரு புலம்பல் சப்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். மருத்துவமனை வராந்தாவில் தந்தை பெரியார் அவர்களைச் சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வருகிறார்கள். “போய்ட்டியா... போய்ட்டியா...” என்று புலம்பிக் கொண்டே தனது இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டு பெரியார் கதறி அழுகிறார். உடனே பெரியாரை நோக்கி விரைந்த காமராஜர் அவரை ஆறுதலாகக் கையைப் பற்றி ராஜாஜி உடல் இருந்த இடம் அருகே அழைத்து வந்தார்கள். ராஜாஜியின் கரங்களைப் பற்றிக் கொண்டு பெரியார் வெகுநேரம் அழுதார். அவரை காமராஜரும், மற்ற தலைவர்களும் ஆசுவாசப்படுத்தி, அமைதி நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு வியப்பாகிப் போய்விட்டது. காலமெல்லாம் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போராடினார்களே... ஆனால் ராஜாஜி மறைவால் பெரியார் இவ்வளவு பெரிய துயரத்தை அனுபவிக்கிறாரே என்பதை எண்ணி எண்ணி வியந்து போனேன். ராஜாஜியும், பெரியாரும் எதிரும் புதிருமாக இருந்தவர்கள். எனினும் ஒருவரையொருவர் அளவுகடந்த அன்போடு நேசித்தார்கள், மதித்தார்கள். அவர்கள் கொள்கைப் போராட்டங்கள், கருத்துப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் இடையே ஆழ்ந்த நட்பு இருந்தது. மரியாதை இருந்தது.

அத்தகைய தலைவர்களெல்லாம் போற்றிய அரசியல் பண்பாடு, தற்காலத்தில் அநேகமாகக் குறைந்து போய்விட்டது. மதிப்பு மிக்க பழைய தலைமுறை தலைவர்கள் ஒருவர் நல்லகண்ணு.

நல்லகண்ணு நூற்றாண்டு விழாவை முதலமைச்சரை அழைத்து நடத்தினீர்களே...

நான் குறிப்பிட்ட முந்தைய தலைமுறை தலைவர்கள் அனைவரும் நூறாண்டுக்கு முன்பே காலமாகி விட்டார்கள். அவர்கள் மறைவுக்குப் பிறகே நூற்றாண்டைக் கொண்டாடினோம். முதன் முறையாக சங்கரய்யா அவர்களுக்கும், நல்லகண்ணு அவர்களுக்கும்தான் அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களது நூற்றாண்டைக் கொண்டாடக் கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. மக்களுக்காகத் தொண்டு புரிய வேண்டும், மக்களுக்காகத் துன்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும், மக்களுக்காக தியாகங்கள் புரிய வேண்டும் என்று பொதுவாழ்க்கைக்கு வருபவர்களுக்கான இலக்கணங்கள் பற்றி காந்தியடிகள் வரையறை கூறினார்.

காந்தியார் கூறியபடியே வாழ்ந்து கொண்டிருப்பவர் நல்லகண்ணு. இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக அவரது வாழ்க்கை அமைந்திருக்கிறது. நல்லகண்ணு நூற்றாண்டு நிகழ்வு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. அதனால்தான் மணிவண்ணன் போன்ற தோழர்களை ஒன்றுகூட்டி விழா எடுத்துக் கொண்டாடினோம். அதேபோல் 2009ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற உலத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் அவருக்கு ‘உலகப் பெருந்தமிழர்’ என்ற விருது கொடுத்து பெருமைப்படுத்தி, நாங்களும் பெருமை அடைந்தோம்.

நல்லகண்ணுவின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றி...

நல்லகண்ணு மதம் கடந்த திருமணம் செய்து கொண்டவர். நல்லகண்ணு மக்களுக்கான தொண்டைச் செய்து கொண்டிருந்தார். அவரது இணையர் ரஞ்சிதம் அம்மையார் குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். தனது பொதுவாழ்க்கைப் பயணத்துக்கு மிகவும் துணையாக இருந்த இணையர் ரஞ்சிதம் அம்மையார் 2016ஆம் ஆண்டு மறைந்தபோது, நல்லகண்ணு அவர்கள் மிகவும் நிலைகுலைந்து போய்விட்டார். ஆனால், வாழ்க்கை நெடுகத் துணை நின்றவரின் பிரிவால் அவர் அனுபவித்த துயரங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம் போல மக்களுக்கான தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தார்.

அதேபோல் நல்லகண்ணு அவர்களின் மாமனார் ஒரு முற்போக்குவாதி. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். தென்மாவட்டங்களில் சாதிய மோதல் ஏற்பட்டபோது, ஒடுக்கப்பட்டப் பிரிவைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டார். தான் பெரிதும் மதித்த மாமனார் கொலையுண்டு கிடந்த துக்கத்தை அடக்கிக் கொண்டார். அந்தப் பகுதியெங்கும் பயணம் செய்து அமைதியை ஏற்படுத்தி, இரு தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில்தான் கவலையும், கவனமும் கொண்டு செயல்பட்டாரே தவிர, மாமனாரைக் கொலை செய்தவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் அவரிடம் இல்லை.

இப்படித் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துக்கம், துயரங்களை யெல்லாம் கடந்து மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து எது நீதியோ அதன்படி செயல்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதி மிக்கவர் நல்லகண்ணு.

நல்லகண்ணு வாழ்க்கை மூலமாக இன்றைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி...

திருவள்ளுவர் தன்னுடைய சான்றாண்மை அதிகாரத்தில்,

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

என்ற குறளை எழுதியுள்ளார். ஒருவர் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்; தீய செயல்களைச் செய்ய வெட்கப்பட வேண்டும்; உலக ஒழுக்கங்களை அறிந்து நடக்க வேண்டும்; அனைவரிடத்திலும் அன்பு கொள்ள வேண்டும்; பொய் பேசாமல் உண்மையுடன் இருக்க வேண்டும். இந்த ஐந்து குணங்களும் சால்பு என்னும் உயர்ந்த நிலையை அடைவதற்கு அடிப்படையான தூண்கள் என இந்தக் குறளின் மூலம் வள்ளுவர் வலியுறுத்துகிறார். வள்ளுவரின் இந்தக் குறளுக்கு உதாரணம் ஐயா நல்லகண்ணு. இந்த மாமனிதரின் அறம் சார்ந்த வாழ்க்கையின் விழுமியங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி இதுவேயாகும்.

SCROLL FOR NEXT