திருச்சி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பி.ஆர். பாண்டியன், திருவாரூரில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவன சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருவாரூர் நீதிமன்றம் அவருக்கு அண்மையில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
அதைத்தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் பி.ஆர்.பாண்டியன் அடைக்கப்பட்டார். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், அவரது தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து பி.ஆர்.பாண்டியன் நேற்று விடுவிக்கப்பட்டார்.
அவரை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமாகா விவசாய அணி மாவட்டத் தலைவர் புங்கனூர் செல்வம் உள்ளிட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘ஓஎன்ஜிசி நிறுவன சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நான் எந்தகுற்றமும் செய்யவில்லை.
அந்ததொழிற்சாலை தீப்பிடித்து எரிந்ததற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவம் நடந்த மறுநாள்தான் நான் அங்கு சென்றேன்’’ என்றார்.
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது, ‘‘விவசாயிகள் மீது ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்’’ என்றார்.