தமிழகம்

பரங்கிப்பேட்டை அருகே வங்கக் கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்ட கடலோரப் பகு​தி​யான பரங்​கிப்​பேட்டை அருகே கடலுக்​குள் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க இந்​துஸ்​தான் ஆயில் நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்கு பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர்.

கடலூர் மாவட்​டம் பரங்​கிப்​பேட்டை பகு​தி​யில் உள்ள நிலப் பரப்​பில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் பல்​வேறு இடங்​களில் எண்​ணெய் கிணறுகள் அமைத்து ஆய்வு மேற்​கொண்டு வரு​கிறது. இந்​நிலை​யில் கடலுக்​குள் 18 கிமீ தொலை​வில் ரூ.425 கோடி மதிப்​பீட்​டில் 4 ஹைட்ரோ கார்​பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்​கு​முறை ஆணை​யத்​தின் அனு​மதி கோரி இந்​துஸ்​தான் ஆயில் நிறு​வனம் விண்​ணப்​பித்​துள்​ளது.

ஹைட்ரோ கார்​பன் திட்​டத்​தால் கடல்​வளம் பாதிக்​கப்​படும் என சூழலியல் அமைப்​பு​கள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. சூழலியல் அமைப்​பு​களின் எதிர்ப்பு உள்ள நிலை​யில் ஹைட்ரோ கார்​பன் கிணறுகள் அமைக்க அனு​மதி கேட்டு விண்​ணப்​பித்​திருப்​பது, அப்​பகு​தி​யில் மீண்​டும் போராட்​டத்​துக்கு வழி​வகுத்​துள்​ளது.

இத்​திட்​டத்​துக்கு கடலூர் சிப்​காட் பகுதி சமு​தாய சுற்​றுச்​சூழல் காண்​காணிப்பு அமைப்​பின் செய​லா​ளர் அருள் கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளார். தற்​போது உலகள​வில் அச்​சுறுத்​தலாக இருக்​கும் காலநிலை மாற்​றம் மற்​றும் புவி வெப்​பமய​மாதல் ஆகிய காரணி​களால் கடலோர சூழல், கடல்​வாழ் உயி​ரினங்​கள் மற்​றும் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு பாதிப்​பு​கள் ஏற்​படும் எனவும், எண்​ணெய் கிணறுகள் அமைப்​ப​தற்​காகக் கடலின் அடிப்​பகு​தியை தோண்​டும்​போது, அங்​குள்ள கடல் புற்​கள் மற்​றும் பவளப்​பாறை​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும் எனவும் தெரி​வித்​துள்​ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இத்திட்டத்துக்கு முந்தைய திமுக அரசு அனுமதி மறுத்தது. அதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழக அரசு பரங்கிப்பேட்டை மட்டுமின்றி தமிழகத்தின் எந்த கடற் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கடலில் கிணறுகளை நிறுவ முற்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும். தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: வங்கக்கடலில் இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் பாதிக்கப்படும்; மாங்குரோவ் காடுகளும் பாதிக்கப்படும். தமிழகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் ஏராளமான ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியும் கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. அதே நிலை தான் இனியும் தொடர வேண்டும்.

SCROLL FOR NEXT