உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றக்கோரி, திருப்பரங்குன்றம் கிராம மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் சந்நிதி தெருவில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத் தில், 50 பேர் பங்கேற்றனர். முன்னதாக, கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு, திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் விண்ணப்பித் தனர். ஆனால், அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
18 வழிகாட்டு நெறிமுறைகள்: அதையடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். அதன்பின்னர், யாரையும் விமர்சித்து பேசக்கூடாது என்பது உள்ளிட்ட 18 வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உண்ணாவிரதம் இருக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி, திருப்பரங் குன்றத்தில் கிராம மக்கள் 50 பேர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசிபிரியா தலைமையில், 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற்றது.
கோரிக்கை பதாகைகள்: இதில் ‘தமிழக அரசே, முருகபக்தர்கள் மனதைப் புண்படுத் தாதே, மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது, திருப்பரங் குன்றம் மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.