தட்டச்சு தேர்வுகளை தட்டச்சுப்பொறிகளிலேயே தொடர்ந்து நடத்தக் கோரி, தமிழ்நாடு தட்டச்சுப்பொறி பழுது நீக்குவோர் நலச்சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: தட்டச்சு தேர்வுகளை கணினி வழியில் மட்டுமே நடத்தும் அரசாணையை ரத்து செய்து, இந்த தேர்வுகளை தொடர்ந்து தட்டச்சு பொறிகளிலேயே நடத்த வேண்டும் என்று கோரி தட்டச்சு பயிலக உரிமையாளர்கள் மற்றும தட்டச்சு பொறி பழுது நீக்குவோர் நேற்று சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தட்டச்சு தேர்வுகள் உள்ளிட்ட வணிகவியல் தேர்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தற்போது தட்டச்சு தேர்வுகள், தட்டச்சு பொறிகள் வாயிலாகவும் கணினி வாயிலாகவும் நடத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டு முதல் இந்த தேர்வுகளை கணினிவழியில் மட்டுமே நடத்த தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில் இதற்கான அரசாணையை ரத்து செய்து, இந்த தேர்வுகளை தொடர்ந்து தட்டச்சு பொறிகளிலேயே நடத்த வேண்டும் என்று கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தட்டச்சு பொறி பழுது நீக்குவோர் நலச்சங்கம் சார்பில் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நாகராஜ், செயலாளர் ஆர்.முருகேசபாண்டியன், பொருளாளர் கே.குமார், துணைத் தலைவர்கள் சி.செல்வராஜ், பி.தரன் உள்பட தட்டச்சு பயிலக உரிமையாளர்கள், தட்டச்சுப்பொறி பழுது நீக்குவோர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து அமைப்பின் மாநில தலைவர் நாகராஜ் கூறும்போது, “அடுத்த ஆண்டு முதல் தட்டச்சு தேர்வுகளை கணினி வாயிலாக மட்டுமே நடத்த தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு செயல்பட்டால் தட்டச்சு பயிலகங்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் தட்டச்சு பொறிகளை பழுது நீக்கும் தொழிலை மட்டுமே நம்பியுள்ள 500-க்கும் மேற்பட்ட தட்டச்சு பொறியாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே புதிய அரசு இதை தடுத்து நிறுத்தி எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.