ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்

 
தமிழகம்

மருத்துவர்களுக்கு மனிதநேயம் அவசியம்: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய உள்விழி லென்ஸ், ஒளி வில்கல் அறுவை சிகிச்சைக் கழகத்தின் (ஐஐஆர்எஸ்ஐ) சார்பில் 2 நாள் சர்வதேச கண் மருத்துவ மாநாட்டை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தொடங்கி வைத்தார். ஐஐஆர்எஸ்ஐ தலைவர் ஜீவன் சிங் திதியால், பொதுச்செயலாளர் அமர் அகர்வால், முன்னாள் தலைவர்கள் டி.பி.லஹானே, ராகினி பரேக், அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் அறிவியல் குழுத் தலைவர் நம்ரதா சர்மா முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேகர் பேசியதாவது: இன்றைய உலகம் டிஜிட்டல் மயமாக, ரோபோக்கள் மயமாக மாறிவிட்டது. தொலை தூரத்தில் இருந்தே ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றாலும், ஒரு மருத்துவர் இருக்க வேண்டியது அவசியம். ஏஐ (செயற்கை நுண்ணறிவு) போன்ற தொழில் நுட்பங்கள் நமக்கு எஜமானர்கள் அல்ல. எனவே, அவற்றுக்கு நாம் அடிமையாகக் கூடாது. அவற்றை ஆள்பவர்களாக இருக்க வேண்டும்.

மருத்துவர்களுக்கு மனித நேயம் அவசியம். அது இல்லாவிட்டால் எந்த பலனும் இல்லை. சிறந்த அரசியல்வாதி, சிறந்த அதிகாரி, சிறந்த மருத்துவர் என யாரும் கிடையாது. சிறந்த மருத்துவராகவோ, அதிகாரியாகவோ மாற வேண்டுமானால், முதலில் ஒரு சிறந்த மனிதராக இருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் மற்றொன்றில் சிறந்தவராக மாற முடியும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

செய்தியாளர்களிடம் ஐஐஆர்எஸ்ஐ பொதுச் செயலாளர் டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது: அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்தும் முன்னணி கண் மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். கண் புரை சிகிச்சை, ஒளி விலகல் அறுவை சிகிச்சை, விழி வெண் படலம், விழித்திரை பாதிப்புகள், பொதுவாக கண் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அதி நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. கண் புரை, லேசர் சிகிச்சையில் அறிமுகமாகியுள்ள அதி நவீன நுட்பங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கெரட்டோகோனஸ்' எனும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரு விழி, கூம்பு வடிவில் மாறிவிடும்.

இவர்களுக்கும், விபத்துகளால் கரு விழி பாதிக்கப்பட்டவர்களுக்கும் கரு விழி மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது. அவர்களுக்கு 'பின் ஹோல் சர்ஜரி அல்லது பின் ஹோல் பியூபிலோபிளாஸ்டி' சிகிச்சை முறை ஒரு வரப் பிரசாதம் ஆகும். இதன் மூலம் கரு விழியை மாற்றாமலேயே அவர்களுக்கு மீண்டும் பார்வையை வழங்க முடியும். மாநாட்டின் முக்கிய அம்சமாக இதுகுறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

உலகம் முழுவதும் 2 கோடி முதல் 6 கோடி பேர் கண் தானத் துக்காகவும், கரு விழி மாற்றத் துக்காகவும் காத்திருக்கின்றனர். இத்தனை பேருக்கு கரு விழி கிடைப்பது சாத்தியமல்ல. எனவே தான், இதுபோன்ற மேம் பட்ட சிகிச்சை முறைகளை அனைத்து மருத்துவர்களிடமும் கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT