சு.வெங்கடேசன் எம்.பி |கோப்பு படம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறைபாடுகளை அறநிலையத்துறை ஏற்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்தேறியுள்ளது. இவ்விழாவுக்கான அழைப்பிதழ் தொடங்கி இப்பெருவிழா நடந்தேறி முடிந்தது வரை எத்தனையோ கருத்துகளும் விமர்சனங்களும் விவாதங்களும் பொதுத்தளத்தில் தொடர்ந்து நடந்து வருவதைப் பார்க்கிறோம்.
குட முழுக்குப் பெருவிழா குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விழாவுக்கு முன்னதாக இரண்டு பதிவுகளை வெளியிட்டேன், இரண்டு முறை நிர்வாக ரீதியாக ஆய்வு நடத்தினேன். அந்த ஆய்வின்போது நான் சொன்ன ஆலோசனைகளைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளவில்லை.
1877ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகம் தான் நவீனகால வரலாற்றில் முறையான பதிவுகள் இருக்கிற பெருவிழா. அந்த கும்பாபிஷேகத்திற்கும் இந்த2026ஆம் ஆண்டு திருக்குட முழுக்கு விழாவுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமையுண்டு. அதுவரை கட்டிமுடிக்கப்படாமல் இருந்த மொட்டைக்கோபுரம் என்று அழைக்கப்பட்ட வடக்குக்கோபுரம் ஏழுகோவில் நகரத்தாரால் (சுமார் பத்தாண்டு காலமாக) கட்டிமுடிக்கப்பட்டு அதன் பின்னர் நடைபெற்ற கும்பாபிஷேகம் 1877ஆம் ஆண்டில் நடந்த கும்பாபிஷேகம்.
அந்தக் கும்பாபிஷேகம் பற்றி எனது காவல்கோட்டம் நாவலில் மிக விரிவாக எழுதியுள்ளேன். தாது வருஷ பஞ்சத்தால் பேரழிவை சந்தித்த மதுரை, அந்த கொடும் நினைவில் இருந்து மீண்டு, சந்தித்த முதல் பெருவிழா அந்தக் கும்பாபிஷேகம். இழப்பின் வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் மீண்டெழுந்து மதுரையின் மாசி வீதிகளில் பூப்பல்லக்குகள் ஆனந்தக்கொண்டாடமாக வலம் வந்த விழா அது.
1877ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் ஏழாவது திருக்குட முழுக்கு விழா இப்பொழுது நடந்துள்ளது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுது ஒரு பெருங்கட்டுமான பணி நடந்து அதன் தொடர்ச்சியாக 2026ஆம் ஆண்டுத் திருக்குட முழுக்கு விழா நடைபெறுகிறது.
அறநிலையதுறையானது, அழைப்பிதழில் அறங்காவற்குழுத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் பெயர்களைப் போடாதது தவறு. அழைப்பிதழில் இடம்பெற்ற 36 பெயர்களில் 19 பெயர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளின் பெயர்கள்.
இவ்வளவு பெயர்களைப் போடும்போது அறங்காவற்குழுவினரின் பெயரைப் போடாதது அறிந்தே நிகழ்ந்த ஒன்று என்பது வெளிப்படையானது. திருப்பணியானது குறுகிய அரசியலுக்கான இடமன்று என்ற பொறுப்போடு அறநிலையத்துறை நடந்திருக்க வேண்டும்.
அழைப்பிதழில் பெயர் இப்பெருவிழாவுக்கான அடிப்படைப் பணிகளான கோபுரங்கள் மற்றும் கோயில் முழுமையையும் செப்பனிடும் திருப்பணியைச் செய்துமுடித்துள்ள ஸ்தபதிகளின் சிற்பிகளின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை.
எரியுண்ட வீரவசந்தராயர் மண்டபத்தை மறுஉருவாக்கம் செய்து தந்துள்ள தலைமைச் சிற்பி உள்ளிட்ட யார் பெயரும் இடம்பெறவில்லை. இத்திருப்பணிக்கான மொத்தச் செலவில், சரிபாதிச் செலவைச் செய்தவர்கள் கொடையாளர்கள். அவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.
மாவட்ட ஆட்சியர் தொடங்கி அறநிலையத்துறை அதிகாரி வரை அனைவரும் இப்பணியைச் சரியாக செய்துமுடிக்க வேண்டிய கடமையுள்ள அரசுப்பணியாளர்கள், பங்கேற்று சிறப்பிப்பவர்கள் அல்லர்.
பெயர் என்பது அங்கீகாரம் மற்றும் அதிகாரத்தின் குறியீடாக இருப்பதால் அரசியலோடு இரண்டறக் கலந்தே இருக்கும். இறைப்பணியில் பக்தியும் சேவையுமுமே முன்னிலை பெறவேண்டும்; அடையாளமும் அங்கீகாரமும் முன்னிலை பெறவேண்டியது இல்லை எனக் கருதுவோர் இக்கருத்தை நல்லெண்ணத்தோடு பரிசீலிப்பர் என நம்புகிறேன்.
திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவுக்கு முந்தைய நாள்களில் நானும் மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர் நாகராஜன் அவர்களும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளோடு ஆய்வுசெய்தோம்.
அந்த ஆய்வில் ஆலோசனைகளையும் மாற்றங்கள் சிலவற்றையும் தெரிவித்தோம். மாநகராட்சியின் ஏற்பாடுகளில் சில பயன்பாடில்லாமல் போயிருக்கலாம், ஆனால் தேவைப்படும் இடத்தில் இல்லாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழவில்லை.
விழாவுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் என்ற கோணத்தில் அணுகுவதற்கும் முறைப்படுத்துதல் என்ற கோணத்தில் அணுகுவதற்கும் வேறுபாடு உண்டு. பெரும்பாலும் காவல்துறை முதல் அணுகுமுறையையே கடைபிடிக்கிறது.
இரண்டாவது அணுகுமுறைதான் களத்தில் மக்களுக்குத் தேவையான ஒன்று. இந்த இடத்தில்தான் விழாவை நடத்தும் துறைக்கும் காவல்துறைக்குமான அணுகுமுறையில் வேறுபாடு உருவாகிறது. இந்த வேறுபாடு எந்த அளவுக்கு குறைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு மட்டுமே பிரச்சினை குறையும்.
இந்த விழாவில் குறைபாடுகளே இல்லை, எல்லாம் சரியாகவே நடந்தது என்று யாரும் வாதிட முடியாது. குறைபாடுகளை நேர்மறையாக ஏற்றுக்கொள்வதும் அதிலிருந்து படிப்பினைகள் பெறுவதும்தான் முக்கியம்.
திருக்குட முழுக்கு விழா முடிவுற்ற பின்னர் நான்கு கோபுரங்களின் எதிர் உள்ள வீதிகளில் குவிந்திருந்த பக்தர்களின் மீது தீர்த்தநீர் எதுவும் தெளிக்கப்படவில்லை. இது பக்தர்களை கோபப்படுத்தியது. தாங்கள் புனிதமாக கருதும் ஒன்று தங்களுக்கு கிடைக்காதனால் ஏற்பட்ட ஆவேசத்தை வெளிப்படுத்தினர். பக்தர்களின் உணர்வு நியாயமானதே.
இரண்டாவது முக்கிய பிரச்சினை விஐபி கலாச்சாரம். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாவில் அனைவரையும் திருக்குட முழுக்கு நன்னீராட்டின்போது கோயிலின் மேற்கூரைக்கு அனுமதிக்க வாய்ப்பில்லை.
கோயில் மேற்கூரையின் இடவசதி, தாங்குந்திறன் இரண்டையும் பொதுப்பணித்துறை மதிப்பிட்டுக் கொடுத்த எண்ணிக்கையின் அடிப்படையில் 11 ஆயிரம் பேரை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்கிறது. எனவே 11 ஆயிரம் பேருக்கு பாஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதில் இரண்டாயிரம் பாஸ் பொதுமக்களுக்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மீதம் உள்ள 9 ஆயிரம் பாஸ்கள் யாரால் எந்த அடிப்படையில் பிரித்துதரப்பட்டது என்பதில் வெளிப்படைத்தன்மை தேவை.
பாஸ் வழங்குவதை யார் தீர்மானித்தார்கள் என்ற கேள்விக்கு யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை. அந்த வெளிப்படைத்தன்மை இல்லாத வரை அரசின் மீதான குற்றச்சாட்டு அகலாது.
பாஸ் எந்த அடிப்படையில் பிரித்துத் தந்தாலும் அதன் மீது விமர்சனம் வரத்தான் செய்யும். ஆனால் அடிப்படையே வெளியில் தெரியாத மர்மமாக இருந்தால் கடுங்குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும்.
குறிப்பாக கோயிலுக்கு பொறுப்பு அதிகாரியை விழாவுக்கு முந்தைய இரண்டு நாள்களில் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது போன் செயலில் இல்லை. எங்களது எந்த ஆய்வு நிகழ்விலும் அவர் இல்லை.
திருக்குட முழுக்கு நிகழ்வை கோயிலின் மேற்கூரையில் அமர்ந்து பார்த்தவர்களே மீண்டும் கருவறை வழிபாட்டிலும் பங்கேற்பது நியதியா? லட்சக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வெளியில் நின்றுகொண்டிருக்கும்போது பாஸ்பெற்று உள்ளே சென்றவர்கள் இரண்டு வகையான முன்னுரிமைகளையும் பெறுவது சரியன்று.
இனிமேல் நடக்கும் திருக்குட முழுக்கு விழாக்களில் கோபுர தரிசனத்தைக்கான பாஸ்பெற்றுச் சென்றவர்கள், அது முடிந்ததும் அப்படியே வெளியேற வேண்டும்.
கோபுரத்துக்கான நன்னீராட்டு முடிந்தவுடன் பொதுவழிபாட்டுக்கு காத்திருக்கும் மக்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கான விதிகளை இந்து அறநிலையத்துறையோ, நீதித்துறையோ உருவாக்க வேண்டும்.
மதுரையில் நடக்கும் சமய விழாக்களை சிறப்பாகவும் மக்கள் கண்ணோட்டத்திலிருந்து முறைபடுத்தவும் நீதித்துறைக்கு முக்கிய பங்குண்டு. அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்யவும் சிறப்பான வழிகாட்டலை உருவாக்கவும் முன்வரவேண்டுமெனக் கோருகிறேன்.
மூன்று முக்கியப் பிரச்சினைகள் நன்னீராட்டு தீர்த்தம் தெளிக்கபடாதது, சித்திரை வீதியில் மக்களை அனுமதிக்காதது. பொதுவழிபாடு பத்து மணிக்கு மேல் என தீர்மானித்தது. தீர்த்தம் தெளிக்க தெளிவான திட்டமிடல் செய்யப்படவில்லை. அதற்கான பொறுப்பை அறநிலையத்துறை ஏற்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.