தமிழகம்

கோயிலில் கேமரா பயன்படுத்த நிர்வாகம் எதிர்ப்பு - தனுஷ் பட பூஜையில் சலசலப்பு

இ.ஜெகநாதன்

திருப்புவனம்: தனுஷின் ‘டி56’ படபூஜைக்காக உரிய அனுமதி பெறாமல், மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் கேமரா பயன்படுத்த அறநிலையத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே மாரநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கருப்பணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (செப்.25) நடிகர் தனுஷுன் 56-வது திரைப்படத்துக்கான பூஜை நடைபெற்றது.

இதில் நடிகர்கள் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, காளிவெங்கட், நகைச்சுவை நடிகர் வடிவேலு, நடிகை பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோயிலுக்கு 18 அடி நீள பிரம்மாண்ட அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தவும், கிடா வெட்டி பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், அதனை கேமராவில் படம் பிடிக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக, படக்குழுவினர் கேமராவை கோயில் வளாகத்துக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால், உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் பெரியசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், படக்குழுவினருக்கும், அறநிலையத் துறை ஊழியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸார் அவர்களை சமரசம் செய்து படக் குழுவினரை கோயிலில் இருந்து வெளியேற செய்தனர். தொடர்ந்து 18 அடி நீள அரிவாளை தனுஷ் நேர்த்திக் கடனாக கோயிலுக்குச் செலுத்தினார். பின்னர், அங்கு குவிந்த ரசிகர்கள், மக்களுக்கு 20 கிடாய்கள் வெட்டி, மட்டன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘டி56’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன், பிரித்தி முகுந்தன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர். நடிக்க இருக்கின்றனர். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருக்கிறார்.

SCROLL FOR NEXT