சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 203 கோயில்களின் புத்தக விற்பனை நிலையங்களுக்கு ஆன்மிக நூல்களை விநியோகம் செய்ய, இந்து சமய அறநிலையத் துறை ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
இதற்கான டெண்டரை அக்.30-ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 493 தலைப்புகளில் 11 லட்சத்து 27,500 புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.
182 டன் எடையுள்ள இந்தப் புத்தகங்கள், சென்னை கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் அகத்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள் ளன. ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க ரூ.1 லட்சம் முன்வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தகங்களை வாகனத்தில் ஏற்றிய நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். புத்தகங்கள் சேதமடைந் தாலோ, எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலோ அதற்கான தொகை ஒப்பந்ததாரரிட மிருந்து வசூலிக்கப்படும்.
கோயில்களிடம் விநியோகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்தத் திட்டத்தில் 162 சைவக்கோயில்களும், 41 வைணவக் கோயில்களும் இடம்பெற்றுள்ளன.
சென்னை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட முக்கியக் கோயில்களுக்கும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. டெண்டர் விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.