மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில் அறநிலையத் துறை ஆணையர் மற்றும் வக்பு வாரியத்தை எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ள உயர் நீதிமன்றம், அனைத்து தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில் ‘திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை ரத்து செய்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு தொடர்பாக சிக்கந்தர் தர்கா தரப்பிலும், மத்திய தொல்லியல் துறை சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை முடிந்ததும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திடீரென திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று உச்சி வரை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தர்கா தரப்பில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தர்காவுக்கு சொந்தமானது. இதை உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அந்த இடத்தை திரும்பக் கோர முடியாது. இந்த வழக்கில் வக்பு வாரியத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்.
இடையீட்டு மனுதாரர் தரப்பில், வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப்புச் சட்டப்படி 1947-ம் ஆண்டில் ஒரு வழிபாட்டுத் தலம் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். அதன்படி, முன்பு திருப்பரங்குன்றம் மலையில் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதோ, அதே இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதி, வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப்புச் சட்டம் வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே பொருந்தும். சொத்துகளுக்கு பொருந்தாது என்றார்.
மற்றொரு இடையீட்டு மனுதாரர் தரப்பில், மதுரையில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமய பிரச்சினை உருவாக்கப்படுவதாக அச்சம் உள்ளது எனக் கூறப்பட்டது. அதற்கு, அவ்வாறு அச்சப்படுவதற்கும், வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார் நீதிபதி.
அனைத்து சாதி அர்ச்சகர் சங்கத் தலைவர் அரங்கநாதன் சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதிடுகையில், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது கோயில் ஸ்தானிகர்கள் எடுத்த முடிவு. இந்த முடிவில் தலையிட காரணம் இல்லை. மேலும் இதை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. இதனால் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதை நிறைவேற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சி தர்காவுக்கு சொந்தமானது என ஏற்கெனவே உத்தரவு உள்ளது என்றார்.
அதற்கு நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையில் 2, 3 உச்சிகள் உள்ளன என்றார். அரசு தரப்பில், இந்த விவகாரத்தை சமூக நல்லிணக்க நோக்கில் நீதிமன்றம் அணுக வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு, சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பது அரசின் கைகளில்தான் உள்ளது என்றார் நீதிபதி. பின்னர் வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் வக்பு வாரியத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது. மனு தொடர்பாக அனைத்து தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ. 27-க்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.