செல்வப்பெருந்தகை | கோப்புப்படம் 
தமிழகம்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் எத்தனை? - செல்வப்பெருந்தகை விளக்கம்

வெற்றி மயிலோன்

சென்னை: “எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம். அவர்களும் அதனை பரிசீலிப்பதாக சொல்லியுள்ளனர்” என திமுக கூட்டணியில் காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகள் எண்ணிக்கை குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் செல்கிறது. எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம். அவர்களும் அதனை பரிசீலிப்பதாக சொல்லியுள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதல்வர் கூறியுள்ளார்.

          

எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான, இயற்கையான, உறுதியான, மதவாதத்துக்கு எதிரான கூட்டணி. இதனை சிதைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம். எங்கள் கூட்டணி தமிழ் மண்ணை காக்கும் கூட்டணி. ஒருபோதும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை.

ராகுல் காந்தி தமிழகத்தின் மீது பற்று வைத்துள்ளார். மதவாத சக்திகள் தமிழகத்தில் நுழைய நாங்கள் விடமாட்டோம். தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவில்லை. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் வதந்தி. கிரிஷ் சோடங்கர் சொல்லாத கருத்தை, அவர் சொன்னதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் உயர் தலைமை திமுகவுடன் கூட்டணி நடத்தவே கூறியுள்ளது” என்று கூறினார்

இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “ திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாகவும், நம்பிக்கையுடனும் நடக்கிறது. எங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து கேட்டுள்ளோம். எங்களின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம். கடந்த முறையை விட அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆட்சியில் பங்கு குறித்தும் திமுக குழுவிடம் பேசியுள்ளோம். இதுகுறித்து இரு நாட்களில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளது” என்றார்

SCROLL FOR NEXT