சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை எத்தனை பேர் மாயமாகியுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து டிஜிபி 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த சங்கர்ராஜ். கடந்த 2021-ல் மாயமானார். சொத்துப் பிரச்சினைக்காக தந்தையும், சகோதரரும் அவரை சிறைபிடித்து கடத்தி வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரி சங்கர்ராஜின் மனைவி புவனேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணை நடந்தது. அப்போது நடைபெற்ற வாதம்: புவனேஸ்வரி தரப்பு: சங்கர் ராஜை கண்டுபிடிக்க போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
காவல் துறை தரப்பு: மாயமான சங்கர்ராஜை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவரை கண்டுபிடித்து தரக் கோரி தந்தை பொன்னனும் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திருக்கோவிலூர் டிஎஸ்பியின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது: காணாமல் போனவர்களின் நிலையைக் கண்டறிய பல்வேறு மாநிலங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
அதுபோன்ற செயலிகள் தமிழக காவல் துறையில் பயன்படுத்தப்படுகிறதா? இதுபோன்ற ஆட்கொணர்வு வழக்குகளில் உயர் நீதிமன்றம் எவ்வளவுதான் உத்தரவு பிறப்பித்தாலும் போலீஸார் தீவிர விசாரணை நடத்துவது இல்லை.
மாயமான சங்கர்ராஜை கண்டு பிடிக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து திருக்கோவிலூர் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல, தமிழகம் முழுவதும் இதுவரை எத்தனை பேர் மாயமாகியுள்ளனர்? இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவற்றின் நிலை என்ன? எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்? மாயமானவர்களை கண்டுபிடிக்க தமிழகத்திலும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறதா? நிலுவை வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து டிஜிபி 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.