படங்கள்: எம்.சாம்ராஜ்

 
தமிழகம்

தவெக தலைவர் விஜய் பொதுக் கூட்டம்: புதுச்சேரி காவல் துறை சமாளித்தது எப்படி?

செய்திப்பிரிவு

புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்றது. கரூர் சம்பவத்துக்குப் பின் நடக்கும் கூட்டம் என்பதால் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே புதுச்சேரியில் குவிந்தனர்.

நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் உப்பளம் துறைமுக வளாகத்தை நோக்கி வந்தனர். ‘க்யூ ஆர் கோடு’ பாஸ் மூலம் 5 ஆயிரம் பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்திருந்தது. க்யூ ஆர் கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரை தள்ளி விட்டு அவர்கள் கூட்ட வளாகத்துக்கள் நுழைய முயன்றனர். போலீஸார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போகச் செய்தனர்.

பொதுக்கூட்டத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. க்யூஆர் கோடு பாஸ் கொடுக்கும் போது, "ஒரு டோக்கனுக்கு இருவர் வரலாம்" என கட்சி நிர்வாகிகள் சிலர் தொண்டர்களிடம் கூறியுள்ளனர். இதை நம்பியவர்கள் ஒரு டோக்கனுக்கு இருவர் என்ற வகையில் வந்தனர். போலீஸார் தடுத்து நிறுத்தி ஒருவருக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்தனர். இதனால் நுழைவுவாயிலில் போலீஸாரிடம் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர்.

பெற்றோர் கடும் அவதி: பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் துறைமுக சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. பொதுக்கூட்டத்துக்காக காலையிலேயே தொண்டர்கள் கூடியதால் உப்பளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாஸ் இல்லாமல் வந்த தொண்டர்களை போலீஸார் திருப்பி அனுப்பினர். அவர்கள் எங்கும் செல்லாமல் ஆங்காங்கே சாலைகளில் நின்றிருந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பள்ளிகளுக்கு அருகில் தடுப்புகளை வைத்து போலீஸார் தடுத்திருந்தனர்.

பல ஊர்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் ஆங்காங்கே வாகனங்களுடன் நின்றதால் புதுச்சேரி நகரின் பல பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பள்ளிகளில் குழந்தைகளை விடுவதற்காக வந்த பெற்றோர் அவதிப்பட்டனர். போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து, பள்ளிக்கு செல்ல அனுமதிக்க கோரினர்.

சிலர் முரண்டு பிடித்து தடை செய்யப்பட்ட வழியாக சென்றனர். இவ்வாறாக நகர பகுதியில் முக்கிய சாலைகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில்வே ஸ்டேஷன் பகுதி சாலையிலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

கூட்ட நெரிசல், போக்குவரத்து நெருக்கடியைக் கண்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம்.

காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்” என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத் தினார்.

கூட்டத்தை கட்டுப்படுத்த சிறிய அளவில் தடியடி நடத்திய போலீஸார்.

எச்சரித்த சீனியர் எஸ்.பி: க்யூ ஆர் கோடு வைத்திருந்தவர்கள் மட்டும் முதலில் பொதுக்கூட்ட மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் நெருக்கியது. ஒரு கட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைவரையும் உள்ளே அனுமதிக்கும்படி கோரினார்.

பாதுகாப்பு பணியில் இருந்த புதுவை கிழக்கு சீனியர் எஸ்பி இஷா சிங், க்யூ ஆர் கோடு இல்லாதவர்களை உள்ளே அனுப்ப மறுத்தார். “மைதானத்தில் நிறைய இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கலாம்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

இதனால் ஆவேசமடைந்த சீனியர் எஸ்.பி, “ஏற்கெனவே 40 பேர் உயிரிழந்துள்ளனர். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டாம். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் நாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து அகன்றனர். நேரம் ஆக. ஆக கும்பல் அதிகரித்தது. விஜய் வரவுள்ளார் என தெரிந்ததும் பலரும் தங்களை உள்ளே விடுமாறு கோரினர். விஜய் பொதுக்கூட்ட வளாகத்துக்கு வருவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு பாஸ் இல்லாத அனைவரையும் வரிசையாக போலீஸார் அனுமதிக்க தொடங்கினர். நெரிசல் இன்றி உள்ளே செல்லுமாறு பார்த்துக் கொண்டனர்.

உப்பளம் துறைமுக வளாக பகுதி சுமார் 25 ஆயிரம் பேர் நின்றாலும் நெரிசல் ஏற்படாது. இதனால் பாஸ் இல்லாதவர்களையும உள்ளே செல்ல அனுமதித்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதே நேரத்தில் குழந்தைகளுடன் வந்தவர்கள் மற்றும் முதியோரை அனுமதிக்க வில்லை.

விஜய் வருவதற்காக தடுப்புச் சுவரை உடைத்து தனிப்பாதை: புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு விஜய் கிளம்பினார். அவர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்கு வந்தார். இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், மரப்பாலம் மூப்பனார் சதுக்கம் வழியாக முதலியார்பேட்டைக்கு விஜய் கார் வந்தது.

தவெக பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் துறைமுக மைதானம் 1 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பெரிய பரப்பளவை கொண்டது. ஆனால் அதற்கு வரும் பாதைகள் மிகவும் குறுகலானவை. அம்பேத்கர் சாலையில் விஜய்யின் கார் வந்தால் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கும்.

அதனால் ஒரு கார் மட்டுமே நுழையக்கூடிய சிறிய பாதையின் வழியாக உப்பளம் துறைமுகத்தின் பின்புறம் விஜய் பிரச்சார வாகனம் வர ஏற்பாடு செய்திருந்தனர். காலை 10 மணி அளவில் அந்த சிறிய பாதையை ஒதுக்கி, தடுப்புகளை ஏற்படுத்தி விஜய் வாகனம் வர போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த சிறிய பாதையின் வழியாக வர துறைமுக வளாகத்தின் பின்புறம் தடுப்புச் சுவரை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் எந்த நெரிசலும் இன்றி காலை 10.20 மணிக்கு விஜய் வாகனம் துறைமுக வளாகத்தை வந்தடைந்தது.

காலை 10.30 மணிக்கு விஜய் பொதுகூட்டம் வளாகம் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 10 நிமிடம் முன்பாகவே விஜய் பொதுகூட்ட மைதானத்தை வந்தடைந்தார் மைதானத்துக்குள் வந்து, ஒரு மணி நேரத்திற்கு பிறகே மேடை ஏறினார்.

துப்பாக்கியுடன் கூட்டத்துக்கு வந்தவரை பிடித்த போலீஸார்: விஜய் பொதுக்கூட்டத்துக்கு நேற்று வந்தவர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்தார். தமிழக முகவரி லைசைன்ஸூடன் அது இருந்தது. “தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினர். தொடர் விசாரணையில், அவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும் சிஆர்பிஎப்பில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

இவர், தவெக சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவின் பாதுகாவலராக உள்ளார். அரசு அனுமதியுடன் இவருக்கு இரு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் டேவிட். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

தவெக பொதுக்கூட்டத்தின் பாஸ் விற்பனையா? - உப்பளம் துறைமுக வளாகத்தில் நேற்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்களுக்கு பாஸ் வழங்கியிருந்தனர். புதுவையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க வேண்டும் என நிர்வாகிகள் மூலம் க்யூ ஆர்கோடுடன் பாஸ் விநியோகம் செய்யப்பட்டது. இதை போலியாக தயாரிக்க சிலர் முயற்சிக்கலாம் என்று கருதி நேற்றுமுன்தினம் இரவுதான் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய் படத்துக்கான பிளாக் டிக்கெட் போல இந்த க்யூ ஆர் கோடு பாஸ் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு ரூ.500-க்கு பாஸை சிலர் விற்றதாக கூறப்பட்டது.

நேற்று காலை தொகையை அதிகரித்து ரூ. 1,000 வரை விற்பனை செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் கேட்டபோது, “பாஸ் யாருக்கும் விற்பனை செய்யவில்லை. கட்சி நிர்வாகிகள் மூலம் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும்தான் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT