சிவகாசி: உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் திட்டத்தின் கீழ், வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டக்கலைத் துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் வேளாண்துறை சார்ந்த பணிகளை செய்யவில்லை எனக் கூறி, தோட்டக்கலை அதிகா ரிக்கு மெமோ வழங்கியதால் அத்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1979-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது வேளாண் துறையில் இருந்து பிரித்து தோட்டப் பயிர்களுக்கு என்று தனித்துறை உருவாக்கப்பட்டது. தற்போது உழவர் நலன் மற்றும் வேளாண் அமைச்சகத்தின்கீழ் வேளாண், தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறி யியல், விதைச் சான்று, வேளாண் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் தோட்டக்கலை மற்றும் வேளாண் துறைக்கு வட்டார அளவில் உதவி இயக்குநர் தலைமையில் அலுவலகங்கள் உள்ளன. வேளாண் விற்பனை மற்றும் வணிகம், பொறியியல், விதை தரச்சான்று துறைகளுக்கு மாவட்ட அளவிலான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் உழவர் நலன் மற்றும் வேளாண் அமைச்சகத்தின்கீழ் உள்ள அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கிடப்பில் போடப்பட்டு, ஆட்சி முடியும் நேரத்தில் துறைகளை இணைக்கும் பணிகள் வேகமெடுத்தன. இத்திட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பிர்கா, கிராம வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். துறைகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 2.0 திட்டப் பணிகளை புறக்கணித்து தோட்டக்கலை அலுவலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்திட் டத்தை ரத்து செய்யக்கோரி, தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் பணிபுரியும் தோட்டக் கலை உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பணிக்கு வராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவர் தொடர்பு திட்டம் குறித்து, எந்த கருத்தும் இடம் பெறாத நிலையில், வேளாண் துறையின் கடலை விதை வழங்கும் பணியை மேற்கொள்ளவில்லை எனக் கூறி, தோட்டக் கலை உதவி இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளதால் அத்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திர ராஜா கூறியதாவது: விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயத் துறையின் வளர்ச்சிக்காகவே வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறைகள் பிரிக்கப்பட்டு, அது சார்ந்த தொழில்நுட்ப அறிவு கொண் டவர்கள் மூலம் துறைகள் இயங்கி வருகின்றன.
உழவர் தொடர்பு திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளையும் இணைப்பதால் துறைகளின் தனித்துவம் மட்டும் இன்றி விவசாயிகளின் நலனும் பாதிக்கப்படும். குறிப்பாக, விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரும் தோட்டப் பயிர்கள் சாகுபடி பாதிக்கப்படும். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை ரத்துசெய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.