அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்
புதுச்சேரி: “போலி மருந்து விவகாரத்தில் நான் சம்பந்தப்பட்டிருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார். நாராயணசாமி சம்பந்தப்பட்டிருந்தால் அவர் அரசியலை விட்டு விலகத் தயாரா” என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சவால் விட்டுள்ளார்.
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:
கேள்வி: போலி மருந்து விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைத்து சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளாரே?
பதில்: போலி மருந்து விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமிதான் சிபிஐ விசாரணை கேட்டார். அவருக்கு செலக்டிவ் அம்னீசியா உள்ளதாக நினைக்கிறேன். அவர் கேட்ட பிறகுதான் எங்களுக்கு பயமில்லை எனக்கூறி நாராயணசாமி பெட்டிஷனுக்கு சப்போர்ட் செய்துதான் பாஜக மாநில தலைவர் ராமலிங்கமும், சிபிஐ விசாரணை கேட்டார். மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட நாராயணசாமி முயற்சிக்கிறார்.
உண்மையாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்பது அவரின் நோக்கம் இல்லை. சட்ட விதிமுறைப்படிதான் அனைத்தையும் விசாரணை செய்ய முடியும். அவர் முதல்வர், மத்திய அமைச்சர் என நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர், அரசு நிர்வாகத்தில் இருந்தவர். அவர் ஏன் இப்படி பேசுகிறார் என புரியவில்லை.
அவர் பேசுவது வேடிக்கையாக, விந்தையாக உள்ளது. தற்போது சுணக்கம் உள்ளது என்கிறார். அப்புறம் ஏன் சிபிஐ விசாரணை கோர வேண்டும்- சுணக்கம் ஏற்படுத்துவதற்காக சிபிஐ விசாரணை கோரினாரா? இதில் அவருக்கு தொடர்பு உள்ளதா? அவர் ஆட்சியில்தான் மருந்து தொழிற்சாலை தொடங்க அனுமதியே வழங்கியுள்ளனர்.
கேள்வி: போலி மருந்து தொழிற்சாலையில் நீங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில்: போலி மருந்து விவகாரத்தில் நான் சம்பந்தப்பட்டிருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலகத் தயார். அவர் (நாராயணசாமி) சம்பந்தப்பட்டிருந்தால் அரசியலை விட்டு விலக தயாரா?
கேள்வி: இலங்கைக்கு போலி மருந்து கடத்தப்பட்டுள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளாரே?
பதில்: இலங்கைக்கு மருந்துகள் கடத்தப்பட்டதாக புதிது, புதிதாக பொய் கூறுகிறார். ஏற்கெனவே வைத்திலிங்கம் ஆட்சியில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் உள்ளதாக புகார் கூறியவர். அவர் பொய் சொல்லி வாழக்கூடியவர் என்பதை புதுவை மாநில மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் மக்கள் அவரை நிராகரித்து வருகின்றனர்.
புதுவை மக்கள் அவருடைய பொய்யை நம்பத் தயாராக இல்லை. இலங்கைக்கு மருந்து கடத்தப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர் புகாரை அலட்சியமாக எடுக்க மாட்டோம். அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.