இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்
மதுரை: கரூர் இனாம் நிலங்கள் விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், “கரூர் மாவட்ட இனாம் நிலங்கள் தொடர்பாக, ‘இந்நிலங்கள் கோயில்களின் பெயரில் இல்லை; தனிநபர்களின் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது; எனவே பதிவுக்கான தடையை நீக்கியது சரியான முடிவு’ என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் நிலையில், வழக்கின் மையக் கேள்விகளையே முன்கூட்டியே தீர்மானிக்கும் வகையில் அமைச்சர் கருத்து தெரிவிப்பது, நீதித்துறை நடைமுறைக்கு மதிப்பளிக்காத செயலாகும்.
மேலும், இது நீதிமன்ற விசாரணையின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் தனிநபர் உரிமை கோருவோருக்கு ஆதரவாக அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் படி நீதிபதிகள் வழக்கை விசாரித்து வரும்போது நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில், அவசர கோலத்தில் அள்ளித்தெளித்த வார்த்தைகள் தீர்ப்பு இப்படித்தான் வரவேண்டும் என்று நீதிமன்றங்களுக்கு மறைமுக அழுத்தத்தை தருகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையங்கள் சட்டம், 1959-இன் பிரிவுகள் 21, 34, 78 மற்றும் 79 கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அறநிலையத்துறையின் அடிப்படைச் சட்டப் பொறுப்பு என்பதை தெளிவுபடுத்துகின்றன. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய அமைச்சரே, கோயில் உரிமை குறித்த சட்டப்பூர்வ ஆய்வு முடிவடையும் முன் தனிநபர் உரிமையை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசு உண்மையிலேயே பல ஆண்டுகளாக அந்த நிலங்களை அனுபவித்து வரும் மக்களுக்கு உதவ விரும்பினால், கோயில்களின் இனாம் நிலங்களை சட்டப்பூர்வமாக தனிநபர்களுக்குக் கொடுக்கத் துணிவதற்குப் பதிலாக, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அல்லது பிற அரசு நிலங்களை உரிய சட்ட நடைமுறைகளின் மூலம் தகுதியுள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம்.
அதற்குப் பதிலாக, தெய்வச் சொத்துக்கள் எனக் கருதப்படும் கோயில் நிலங்களின் பாதுகாப்பையே பலவீனப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொள்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ஒரு புறம் கோயில் சொத்துக்கள் மோசடிக்குள்ளாகின்றன என்று ஒப்புக்கொள்ளும் அமைச்சர்,மறுபுறம் அதே வகை நிலங்களுக்கு பதிவை எளிதாக்குவது கோயில் சொத்துக்களின் பாதுகாப்புக்கு எதிரான அணுகுமுறையாகும்.
எனவே, நீதிமன்ற வழக்குகள் முடிவடையும் வரை எந்தவித புதிய பதிவுகளும் அனுமதிக்கக் கூடாது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணைக் குழு அமைத்து அனைத்து இனாம் நிலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். கோயில் சொத்துக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
நீதிமன்ற விசாரணை நடைபெறும் விவகாரங்களில், நிர்வாகத்தின் சார்பில் முன்கூட்டியே தீர்ப்பளிப்பது போன்று கருத்து தெரிவிப்பதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும். கோயில் சொத்துக்கள் அரசின் சொத்துக்கள் அல்ல, அவை பொதுமக்களின் மதநம்பிக்கையுடன் இணைந்துள்ள பொது அறக்கட்டளைச் சொத்துக்கள். அவற்றைப் பாதுகாப்பது அரசின் அரசியலமைப்புச் சட்ட மற்றும் சட்டப்பூர்வக் கடமையாகும்.
அந்தக் கடமையை நிறைவேற்றத் தவறி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.