தமிழகம்

“விநாயகர் சதுர்த்திக்கு நெருக்கடி நீடித்தால் விஜய் அரசும் காணாமல் போகும்” - இந்து முன்னணி மாநில தலைவர்

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “விநாயகர் சதுர்த்திக்கு நெருக்கடி அளிக்கும் போக்கை மாற்றிக்கொள்ளாவிடில், திமுக போல் விஜய் அரசும் காணாமல் போகும்” என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டதற்காக காவல் துறையினர் இருக்கும்போதே குண்டு வைப்போம் என கூறியவர்களை கைது செய்ய வேண்டும்.

10 நாட்களுக்குள் கைது செய்யாவிடில் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். விநாயகர் சதுர்த்திக்கு தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 15 லட்சம் வீடுகளில் சிறிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. விழிப்புணர்வு ஏற்பட்டு இந்துக்கள் ஒற்றுமையாகி வருகின்றனர். இதை சிலரால் பொறுக்க முடியாமல் கலவரம் செய்ய முயன்றனர்.

இந்து முன்னணி விழிப்புடன் இருந்ததால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. சில ஊர்களில் நேர்மையான காவல் துறை அதிகாரிகளால் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

பல இடங்களில் காவல் துறை அதிகாரிகள் விநாயகர் சதுர்த்திக்கு எதிராக நடந்துள்ளனர். இதை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் திமுக அரசு எப்படி காணாமல் போனதோ, அதைப் போலவே விஜய் அரசும் காணாமல் போய்விடும்” என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

SCROLL FOR NEXT