ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட காலகுண்டா மற்றும் பார்வதி நகர் மலைக்குன்றில் உள்ள குடியிருப்புகள்.

 
தமிழகம்

ஓசூர் பார்வதி நகரில் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் மலைக்குன்று மக்கள்!

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர் மலைக்குன்றில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகராக ஓசூர் உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நகராட்சியாக இருந்த ஓசூர் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து 45 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும் நகரில் குடிநீர், சாக்கடை கழிவுநீர் கால்வாய், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதனால், மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலையுள்ளது.

இந்நிலையில், ஓசூர் 26-வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர் மற்றும் காலகுண்டா மலைக்குன்று பகுதியில் அடிப்படை வசதிகளின்றி கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் பரிதவித்து வருவதாகவும், குறிப்பாக மலைக்குன்றின் உயரத்தில் உள்ள 25 வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக பார்வதி நகர் மலைக்குன்று மீது 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சீரான குடிநீர் கிடைப்பதில்லை.

தெருக்களில் சேரும் குப்பைக் கழிவுகள் முறையாக அள்ளப்படுவதில்லை. சாக்கடை கழிவுநீர் கால்வாய் இல்லாததால், மழைக் காலங்களில் கழிவுநீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. இந்த நீர் வடிய பல நாட்கள் ஆகும் என்பதால், சுகாதாரமற்ற நிலை இருந்து வருகிறது.

பொது கழிப்பறை இல்லாததால் பலரும் திறந்தவெளிகளை பயன்படுத்துவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பாதை வசதியில்லாததால் கரடு முரடான குன்று பாதையில் செல்ல தினசரி பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ரேஷன் கடை இல்லாததால் மலையிலிருந்து கீழே இறங்கிப் பொருட்களை வாங்க முதியவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், முறையாக பயனாளிகளுக்கு வந்து சேரவில்லை. எனவே, எங்கள் மலைக்குன்றை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து, சீரான குடிநீர், சாலை மற்றும் இறக்கமான பகுதிகளில் படிக்கட்டு, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு, கழிப்பறை, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT