சென்னை: “நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் எரிபொருள் விலையை, கார்ப்பரேட்டுகளின் லாபத்துக்காக சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் கருவியாகப் பயன்படுத்துவது பாசிச பாஜக அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சர்வதேசச் சந்தை மற்றும் போர்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 3 ரூபாய் 10 காசுகள் வரை உயர்த்தியுள்ள ஒன்றிய பாஜக அரசின் செயல், இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கையாகும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் எரிபொருள் விலையை, கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காகச் சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் கருவியாகப் பயன்படுத்துவது இந்த பாசிச அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது.
இந்த விலை உயர்வு என்பது வெறும் பெட்ரோல் பங்கோடு முடிந்துவிடுவதல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை இது பலமடங்கு உயர்த்துகிறது. டீசலை நம்பி இயங்கும் இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலை மின் உற்பத்திக் கருவிகளின் செலவு அதிகரிப்பதால், சிறு வணிகர்கள் தங்கள் தொழிலை நடத்த முடியாமல் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிப்பதோடு, வேலையில்லாத் திண்டாட்டத்தையும் தீவிரமாக்குகிறது.
நாட்டின் ரத்த நாளங்களாகச் செயல்படும் லாரி உள்ளிட்ட சுமையுந்து போக்குவரத்துத் துறை, இந்த டீசல் விலையேற்றத்தால் மரண அடியைச் சந்தித்துள்ளது. வாடகை உயர்வு, உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு எனப் பலமுனைத் தாக்குதலால் லாரி உரிமையாளர்கள் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், ஆட்டோ, வாடகைக் கார் மற்றும் அன்றாடப் பயணங்களை நம்பியுள்ள சாமானிய மக்களின் போக்குவரத்துச் செலவு இருமடங்காக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கானப் பயணங்களையும் பெரும் சுமையாக மாற்றியுள்ளது.
டீசல் விலை உயரும்போது, விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, அரிசி, பருப்பு, எண்ணெய் முதல் காய்கறிகள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏழை மக்களின் கைக்கெட்டாத உயரத்திற்குச் செல்கிறது. ஒரு விவசாயியின் உழைப்பு முதல் இல்லத்தரசிகளின் சமையலறை பட்ஜெட் வரை இந்த விலை உயர்வு நேரடியாகத் தாக்குகிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நடுத்தரக் குடும்பங்கள், இந்தச் சங்கிலித் தொடர் விலையேற்றத்தால் தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
140 கோடி மக்களை, உலகச் சந்தையின் அதிர்வுகளுக்குப் பலிகொடுத்துவிட்டு, நீண்டகால எரிபொருள் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கத் தவறியது பாஜக அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். தற்சார்புப் பொருளாதாரம் என்று மேடைக்கு மேடை முழங்கும் இவர்கள், உண்மையில் மக்களை அந்நியச் சந்தைக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். இது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து தவறிய ஒரு பாசிச அரசின் முகத்திரையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
மக்களின் வியர்வையைச் சுரண்டி, கார்ப்பரேட்டுகளின் கஜானாவை நிரப்புவது ஓர் அரசின் வேலையாக இருக்கக் கூடாது என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். எனவே, தொழில்துறையையும், ஏழை எளிய மக்களின் வாழ்வையும் சீரழிக்கும் இந்த எரிபொருள் விலை உயர்வைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.