பாமகவுக்கு சொந்தம் கொண்டாடி அதன் தலைவரான அன்புமணிக்கும், அவரது தந்தையும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸுக்குமிடையே உச்சகட்ட மோதல் போக்கு நீடித்து வருகிறது. அன்புமணி அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்ற நிலையில், அதற்கு எதிராக ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், பாமகவின் மாம்பழம் சின்னத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடந்தாண்டு ஜூலையில் அனுப்பிய கடிதம் பாமகவின் தலைமை அலுவலகம் இயங்கி வரும் தேனாம்பேட்டை நாட்டு முத்து நாயக்கன் தெரு என்ற முகவரிக்கு அனுப்பப்படாமல், தவறுதலாக அன்புமணி ஏற்கெனவே வசித்த தி.நகர் திலக் தெரு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாம்பழம் சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம் என்றும், பாமகவின் தலைவர் ராமதாஸ் தான் என்பதையும் அங்கீகரித்து எங்களது முகவரிக்கு அந்தக் கடிதத்தை அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், பாமக தலைவராக பதவி வகித்த அன்புமணியின் பதவிக்காலம் கடந்த 2025 மே மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதன் பிறகு பாமகவின் தலைவராக ராமதாஸ் மட்டுமே நீடித்து வருகிறார். ஆனால் அன்புமணி, தான் தற்போதும் தலைவர் பதவியில் தொடருவது போல போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். பாமகவின் நிறுவனர் என்ற முறையில் தனது அனுமதியின்றி அன்புமணி நடத்தும் கூட்டங்கள் சட்டவிரோதமானவை. அந்தக்கூட்டங்கள் வாயிலாக பாமகவுக்கு சொந்தம் கொண்டாடி அன்புமணி ஒருபோதும் உரிமை கோர முடியாது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாம்பழம் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படாது என தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் அதைமீறி தற்போது தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
ராமதாஸ் தொடர்ந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் அருள், வி.எஸ்.கோபு உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
அப்போது இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டுமெனக்கோரி அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் முறையிட்டனர். ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதிகள், நீங்கள் இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இல்லை என்பதால் இந்த வழக்கில் உங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதிக்க முடியாது, என மறுப்பு தெரிவித்தனர்.