சென்னை: மிருக வதை தடுப்பு சட்ட விதிகளை மீறி இறைச்சிக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்ட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: மிருக வதை தடுப்புச் சட்டத்தில் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களை வெட்ட தனி இடங்களை ஒதுக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அவற்றை வெட்டக் கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல உயிருடன் உள்ள பிற விலங்குகளின் கண் முன்பாக அவற்றை வெட்டக் கூடாது. வெட்டப்படும் கால்நடைகளின் ரத்தத்தை முறையாக சேகரிக்க வேண்டும். ஆடுகளை வெட்ட அமைக்கப்பட்டுள்ள ஆட்டுத்தொட்டிகளில் கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்படும் விலங்குகளை மட்டுமே வெட்ட வேண்டும் என சட்ட விதிகள் உள்ளன.
ஆனால் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் இந்த விதிகள் மீறப்படுகின்றன. இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடு, மாடு, கோழிகளின் ரத்தம் நேரடியாக கால்வாய்களில் விடப்படுகிறது. இறைச்சிக் கழிவுகள் வெட்ட வெளியில் குப்பைத் தொட்டிகளில் போடப்படுவதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
எனவே, சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களில் மிருக வதை தடுப்புச் சட்ட விதிகளையும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்ட விதிகளையும் கண்டிப்பான முறையில் பின்பற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை ஆடு, மாடுகளை வெட்ட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் நடந்தது. அப்போது, எந்தெந்த இறைச்சிக் கடைகளில் இதுபோல விதிமீறல்கள் நடைபெறுகின்றன என்பதை குறிப்பிட்டு வழக்கைத் தொடராமல், பொத்தாம்பொதுவாக குற்றம்சாட்டி இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.