சென்னை: ‘மத வழிபாட்டு தலங்களை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில் ஆர்எஸ்எஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா மற்றும் வழக்கறிஞர் ரபு மனோகர் உள்ளிட்டோர், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், மாநிலம் முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல அனுமதி கோரப்பட்ட நிலையில், 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த உடன்பாடு எட்டப்படவில்லை.
அந்த வழித்தடங்களில் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் உள்ளதால் சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்படவில்லை.
எஞ்சிய இடங்களில், வட மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பை அக்.25 அன்றும், தென் மாவட்டங்களில் நவ.1-ம் தேதியன்றும் நடத்த அனுமதியளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.
அதைத்தொடர்ந்து, எத்தனை பேருடன் அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது என்பது குறித்த விவரங்களை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காவல் துறையினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளார்.
நாளை உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்
விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ‘‘நான் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது பெரும்பாலும் இஸ்லாமியர்களுடன்தான் பயணித்துள்ளேன்.
தேவாலயங்கள், மசூதிகள் போன்ற மத வழிபாட்டுத் தலங்களை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது.
எத்தனை இஸ்லாமியர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? அவர்களை தவறாக சித்தரிக்கக்கூடாது. நீங்கள் இப்போது அனுமதி மறுத்தால் நாளைக்கு நீங்கள் எதிர்க்கட்சியாகும்போது உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்’’ என்றார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.