மதுரை: ‘காதல் விவகார படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின், காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் காதல் விவகார கொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க தனிச்சட்டம் இல்லை. எனவே காதல் விவகார கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், வடமலை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘நெல்லை கவின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
கவின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. காதல் விவகார கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.
இதையடுத்து, ‘‘சிறப்புச் சட்டம் இயற்ற அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனுமுடித்து வைக்கப்படுகிறது’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.