உயர் நீதிமன்றம்
சென்னை: சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கள ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் கூறுவது பணியைத் தாமதப்படுத்தும் தந்திரம் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அகற்ற கனிம நிதியில் இருந்து ரூ. 5 கோடியை உடனடியாக விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், வருவாய்த்துறைச் செயலரை நோடல் அதிகாரியாக நியமித்து இதுதொடர்பாக கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக கடந்த ஆக.12 அன்று அதிகாரிகள் அளவிலான கூட்டம் நடத்தப்பட்டதாகவும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கள ஆய்வு நடத்தி மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது இப்பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வி. பாரதிதாசன் காணொளி மூலமாக ஆஜராகி சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பாக இதுவரையிலும் தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும், கடந்த வாரம் கூட கூட்டம் நடந்துள்ளது. ஆனால் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை இன்னும் முழுமையாக அகற்றாத நிலையில் கள ஆய்வு நடத்தப்படும் எனக்கூறுவது இப்பணியைத் தாமதப்படுத்தும் அதிகாரிகளின் தந்திரம் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டுக்கான கனிம நிதி, அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவில் உள்ளதால், அந்த நிதியிலிருந்து, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் வகையில் ரூ. 5 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர்.
அத்துடன் இந்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், முதலில் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.18-க்கு தள்ளி வைத்துள்ளனர்.