கோப்புப் படம்
சென்னை: சட்டவிரோத கிட்னி திருட்டு வழக்கில் கைதான இடைத்தரகர் மோகனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய விசைத்தறி கூலித் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆனந்த் மற்றும் மோகனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சட்டவிரோத கிட்னி திருட்டு சம்பவத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், தனது முதுமை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், நாமக்கல் மாவட்டத்தில் ஏழைக் கூலித்தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்டஇந்தக் கிட்னி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அரசு ஒருபோதும் மன்னிக்காது. வழக்கு விசாரணை தொடக்கநிலையில் இருப்பதால் இடைத்தரகராக செயல்பட்ட மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, ஜாமீன் கோரிய மோகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.