சென்னை: தவெக வேட்பாளரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கை தாக்கியதாக அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் சேகர் பாபு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, சேகர்பாபு தரப்பில், ‘‘சம்பவம் நடந்து 29 நாட்களுக்குப் பிறகு, தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறியிருப்பது போல எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கை ரத்துசெய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, சேகர்பாபுவின் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவி்த்தார்.
அப்போது சேகர்பாபு தரப்பில் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.