தமிழகம்

என்ஐஏ தொடர்ந்த வழக்கில் இருந்து இங்கிலாந்து பிரஜையை விடுவிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்த வழக்கில் இருந்து இங்கிலாந்து பிரஜையை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் ஹிஸ்ப் உத் தஹ்ரிர் என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும், அந்த அமைப்புக்காக சென்னையில் ஆள்சேர்க்கை நடத்தியதாகவும் இங்கிலாந்து பிரஜையான அஸிஸ் அஹமது என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அஸிஸ் அஹமது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது, அமைப்பின் கொள்கைகள் குறித்து வகுப்பு நடத்தி ஆட்சேர்க்கையில் ஈடுபட்டது, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தீவிரவாத செயல் எனக் கூறி அஸிஸ் அகமதுவை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT