உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் துணிச்சலான பெண் மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மதுரை 5-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதுரை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் சில வழக்கறிஞர்கள் சேர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தனர் என்றும், இந்தச் சம்பவத்தில் வழக்கறிஞர்கள் ஒருமையில் பேசி நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து நீதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நீதிமன்றப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நீதிபதி தனது இருக்கையிலிருந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கான நோட்டீஸை அந்த நீதிபதி பிறப்பித்தார். இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி விக்டோரியா கெளரி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் இந்த விவகாரத்தை சுமுகமாகப் பேசித் தீர்க்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை பொறுத்தவரை, கண்ணியத்தையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்த, வழக்கறிஞர்களின் அனுபவம் அல்லது பதவியைக் கண்டு அஞ்சாமல், சட்டத்தின் மாண்பைக் காக்க துணிச்சலுடன் செயல்பட்ட இளம் நீதிபதியான லட்சுமி பிரியாவின் மனஉறுதியை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.
வழக்கறிஞர்கள் நீதிமன்ற அதிகாரத்தை மீறி அழுத்தம் கொடுக்க முயன்றால், அதை ஏற்க முடியாது. மாவட்ட நீதித்துறை நீதி வழங்கல் அமைப்பின்முதுகெலும்பாகும். சாதாரண குடிமகன் முதலில் அணுகுவது இந்த நீதிமன்றங்களைத் தான். எனவே, நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் கவுரவத்தையும் பேணுவது வழக்கறிஞர்களின் கடமை.
நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் போன்ற முதற்கட்ட ஆதாரங்கள் உள்ள நிலையில், இந்த கட்டத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.