தமிழகம்

வன்முறையைத் தூண்டியதாக வழக்கு: திருமாவளவனை விடுவித்து ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து விசிக தலைவர் திருமாவளவனை விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2014-ம் ஆண்டு ஜன.8 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக திருமாவளவன் மீது ஓதியம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி திருமாவளவன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.

          

அந்த உத்தரவை ரத்து செய்து தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில், “சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசின் முன்அனுமதி பெறாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்” என வாதிடப்பட்டது.

புதுச்சேரி அரசு தரப்பில், “வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசின் முன்அனுமதி பெற தேவையில்லை என்பதால் இந்த வழக்கில் இருந்து திருமாவளவனை விடுவிக்கக் கூடாது” என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை” எனக் கூறி திருமாவளவன் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவித்தும், கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT