குவாரி
மதுரை: சட்டவிரோத குவாரிகள் நடத்துவோர் மீது அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த காசிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘தமிழகத்தில் சுமார் 1700 கல் குவாரிகளுக்கு அரசு உரிமம் வழங்கியுள்ளது. குவாரி உரிமம் பெறுபவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக கற்களை வெட்டுகின்றனர். பலர் உரிமம் காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக கற்களை வெட்டி விற்பனை செய்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பல்வேறு சட்டவிரோத கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. சிலர் அரசு புறம்போக்கு நிலங்களை பட்டா நிலமாக போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த இடங்களில் கல்குவாரிகள் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
புதுக்கோட்டையில் எழில் நகரைச் சேர்ந்த முருகேசனும், கரூர் ஆண்டாங்கோயிலில் ரங்கசாமி என்பவரும் சட்டவிரோத குவாரி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுவாக சட்டவிரோதமாக குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்தால் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
சிலருக்கு சட்டவிரோத குவாரி நடத்தியதற்காக பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை வசூல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
அதே நேரத்தில் சட்டவிரோதமாக குவாரிகள் நடத்துவோருக்கு அபராதம் மட்டும் விதிக்காமல் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சட்டவிரோத குவாரி நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். அரசு தரப்பில், ‘குளத்தூர் வத்தனாக்குறிச்சி கிராமத்தில் முருகேசன் என்பவர் உரிமம் வழங்கப்படாத நிலங்களில் சுமார் 9 ஆயிரம் கனமீட்டர் கனிம வளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததற்காக அவருக்கு கடந்த 2023-ல் ரூ.3.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
அவர் இதுவரை அபராத தொகையை கட்டாததால் வருவாய் துறை சட்டப்படி அபராதத் தொகையை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘சட்டவிரோத கனிம திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பது மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஜெயந்த் வழக்கில் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.