தமிழகம்

போக்சோ வழக்குகளில் அரசு மருத்துவர்கள் உண்மையை தெரிவிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: போக்சோ உள்ளிட்ட பாலியல் வழக்குகளில் அரசு மருத்து வர்கள் உண்மையை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நம்பு காளீஸ்வரன், செல்வராஜ் ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றம் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி 21.8.2014-ல் தீர்ப்பளித்தது. இந்த தண் டனைக்கு எதிராக இருவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

அதுவரை தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கவும் கோரி யிருந்தனர். மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மனுதாரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுவனின் உடலில் காயங்கள் இல்லை என குறுக்கு விசார ணையின்போது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. அரசு தரப்பில், பாதிக்கப்பட்ட சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாக அதே அரசு மருத்துவர் முதன்மை விசாரணையின்போது தெரி வித்துள்ளார் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்ட சிறுவன் மனுதாரர்கள் இருவரும் தன்னை துன்புறுத்தி யதாக நீதித்துறை நடுவர் முன் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியளித்தபோதும் அதை சிறுவன் உறுதிப்படுத்தியுள்ளார். ​​

பாதிக்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவரின் சாட்சியத்தில் வெளிப்படையாக முரண்பாடு இருப்பது தெரிகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் பெரோஸ்கான் நேரில் ஆஜராகி விளக்க உத்தரவிடப்பட்டது.

அவர் சமர்ப்பித்த ஆவணங் களை ஆய்வு செய்தபோது பாதிக்கப்பட்ட சிறுவனின் உடலில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டு பதிவு செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது. இந்த விவரங்கள் காயச்சான்றிதழில் முறையாக இடம்பெறாதது இந்த முரண்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் அந்த மருத்துவர் பணிச்சுமை காரணமாக விசாரணையின் போது கேள்விக்கு தவறுதலாக பதிலளித்ததாகவும், இதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித் துள்ளார்.

போக்சோ வழக்குகளில் மருத்துவ-சட்ட அறிக்கை வடிவிலான ஆவணச் சான்றுகள் மற்றும் நீதிமன்றத்தின் முன் நிபுணர் அளிக்கும் சாட்சியம் வடிவிலான வாய்மொழிச் சான்றுகள் முக்கியமானது. குழந்தையின் உடலில் காணப்படும் காயங்கள் பாலியல் வன்முறைக்கான அறிகுறியா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிப்பதில் மருத்துவ நிபுணர்களின் சாட்சியம் முக்கியப் பங்காற்றுகிறது.

எனவே மருத்துவர்கள் உண்மையை மட்டுமே கூற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர் கள் அளிக்கும் சாட்சியம் தெளிவானதாகவும், பாரபட்ச மற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவற்ற அல்லது உறுதியற்ற நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும்.

நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதோடு அல்லது மருத்துவ நடைமுறைகளைச் செய்வதோடு தங்கள் தொழில்முறைப் பொறுப்புகள் முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்துக்கு உதவுவது என்பது அவர்களின் தொழில்முறை கடமைகளின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

காயச் சான்றிதழ் மற்றும் விபத்துப் பதிவுப் புத்தகங்கள் போன்ற மருத்துவ-சட்ட ஆவணங்கள் தெளிவாகவும், வாசிக்கக்கூடிய வகையிலும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

அவற்றை தட்டச்சு செய்யப்பட்ட வடிவில் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். போக்சோ உட்பட பாலியல் வழக்குகளில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட திருத்தப்பட்ட படிவத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அந்த படிவம் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு சான்றா வணமாக சமர்ப்பிக்க வேண்டும். இது மருத்துவச் சான்றுகளை விசாரணை நீதிமன்றங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு பரிசீலிக்க உதவும்.

இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பிற அரசு சுகாதார நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அரசுச் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் விரிவான சுற்றறிக்கை / வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் மருத்துவரின் முரண்பாடான சாட்சியம் காரணமாக தண்டனையை நிறுத்திவைக்க மனுதாரர்கள் கோருவதில் முகாந்திரம் இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT