எம்.எஸ் தோனி | கோப்புப் படம்
சென்னை: நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு தோனி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கு குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறியதாக, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‘வாக்குமூலம் பதிவை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். வாக்குமூல பதிவை, ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசு கட்டிடங்களில் நடத்த வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை அரசு கட்டிடம் அல்லது நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, ‘ஐந்து நட்சத்திர விடுதியில் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதில் என்ன பிரச்சினை? அதற்கான செலவுகளை அவர்கள்தானே செய்யப்போகிறார்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, தோனி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தோனிக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.