தமிழகம்

வாடகைத்தாய் மூலம் குழந்தை: 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ‘வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியர், தங்களை பெற்றோர் என உரிமை கோரி தாக்கல் செய்யும் மனுக்கள் மீது 4 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும்’ என குற்றவியல் நடுவர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைக்கு, பெற்றோர் என உரிமை கோரி நாமக்கல்லைச் சேர்ந்த தம்பதி, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

ஆனால் பெற்றோர் என உரிமைகோரும் பெண் 50 வயதைக் கடந்து விட்டதாகவும், வாடகைத்தாயாக செயல்பட்ட பெண்ணின் கணவரிடம் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும் கூறி, அந்த மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அந்த தம்பதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஷமீம் அகமது முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜ கோபாலன் ஆஜராகி, ‘‘எங்களது தரப்பு கோரிக்கை நியாயமானது என்பதால், குழந்தையின் எதிர்காலத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆகியோர் தங்களது வாதத்தில், ‘‘வாடகைத்தாய் ஒழுங்குமுறைச் சட்டமானது குழந்தை பெற விரும்பும் தம்பதியர், வாடகைத் தாயாக செயல்படும் இளம்பெண்கள் மற்றும் பிறக்கவுள்ள குழந்தைகளின் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் இயற்றப்பட்ட பிரத்யேகச் சட்டமாகும்.

இதில் உள்ள சிறு குறைபாடுகளைக் காரணம் காட்டி, வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் உரிமையையே பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது. வாடகைத் தாய் மூலமாக குழந்தைபெற விரும்பும் பெண் 50 வயதைபூர்த்தி செய்திருந்தாலும் 51 வயதை அடையும் வரை அவர்சட்டப்படி தகுதியுடையவரா கவே கருத வேண்டும்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், தகுதிச் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்யும் மேல்முறையீட்டு அதிகாரியைப் போல செயல்பட முடியாது’’ என வாதிட்டனர். அதையேற்ற நீதிபதி, இதுதொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்தார்.

அத்துடன், மீண்டும் இந்த மனுவை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டுமென நாமக்கல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி ஷமீம் அகமது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் அசன் முகமது ஜின்னா, ஜான் சத்யன் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

அத்துடன், ‘‘இனி வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியர், தங்களை பெற்றோர் என உரிமை கோரி தாக்கல் செய்யும் மனுக்களை சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் சட்டத்துக்கு உட்பட்டு 4 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.

வாடகைத் தாயாக செயல்படும் பெண் தனது சுயவிருப்பத்துக்கு உட்பட்டு செயல்படுகிறாரா என்பதையும், குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு உரிமை கோரப்போவதில்லை என்றும், இதில் வணிக நோக்கம் இல்லை என்பதையும் உத்தரவாதமாகப் பெற வேண்டும்.

அதேபோல குழந்தையை கடைசி வரை கைவிட மாட்டோம் என பெற்றோரிடமும் உத்தரவாதம் பெற வேண்டும். இந்த விதிமுறைகளை தமிழகம் முழுவதும் அமல்படுத்த ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி களும் தகுந்த சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT