தமிழகம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலையில் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது ஐகோர்ட்

இளைஞரின் மனுவை ஏற்று உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கருணாஸ் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2 அன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த சிறுமி, 2 நாட்களுக்குப் பிறகு அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த முத்தியால்பேட்டை போலீஸார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை உறுதி செய்யக் கோரி புதுச்சேரி போக்சோ நீதிமன்ற உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணாஸ் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கருணாஸுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT