தமிழகம்

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கை 60 நாளில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு விசாரணையை 60 நாட்களில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சீயோன்நகரில் சாலையில் நடந்து சென்றவர்களை அரிவாளால் வெட்டியதாக கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்பவர், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸார் தாக்கியதால் ஆகாஷ் உயிரிழந்ததாக கூறி போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி ஆகாஷ் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

          

ஆகாஷின் தந்தை இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆகாஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்கில், எஸ்சி, எஸ்சி தடுப்பு சட்டப்பிரிவை சேர்க்கவும், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கறிஞர்கள் கு.சாமிதுரை தலைமையில் வழக்கறிஞர்கள் ஆணையர்கள் குழு அமைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து வழக்கறிஞர்கள் ஆணையர்கள் ஆகாஷின் உறவினர்களை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என மறுத்துவிட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு எதிராக கிராம மக்கள் சார்பில் நான்கு வழிச்சாலையில் இன்னொரு பகுதியில் திடீர் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களை வழக்கறிஞர்கள் ஆணையர்கள் சமரசம் செய்தனர்.

இந்நிலையில், ஆகாஷ் வழக்கு நீதிபதி எல்.விக்டோரியா கெளரி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்கின்றனர். நான்கு வழிச்சாலையின் மத்தியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்’ என்று கூறி போராட்டம் தொடர்பான வீடியோ பதிவு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நீதிபதி, ‘தேசிய நெடுஞ்சாலையை விட்டு வேறு இடத்திற்கு சென்று போராட்டத்தைத் தொடரலாம் என அறிவுறுத்திய பிறகும் இடத்தை காலி செய்யாமல் இருப்பது ஏன்? முதல் தகவல் அறிக்கையில் வன்கொடுமை சட்டம் சேர்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகும் போராட்டத்தை தொடர்வது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.

அரசுத் தரப்பில், ‘குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிற சமூகத்தினர் சிரமத்திற்கு ஆளாகுவதாக கருதுவதால் பிரச்சினை எழும் சூழல் உள்ளது’ எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதி, ‘கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகும், பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கும் வகையில் போராட்டத்தை கைவிடாமல் தொடர்பவது சரியானது அல்ல. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே சென்று போராட்டத்தைத் தொடரலாம். போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலையை காலி செய்ய வேண்டும். தவறினால் அவர்களை அகற்ற போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம்’ என்றார்.

அரசுத் தரப்பில், ‘நிபுணர் குழுவின் உடற்கூராய்வு அறிக்கை தொடர்பாக மனுதாரர் தெரிவிக்கும் ஆட்சேபனை ஏற்கும்படியாக இல்லை’ எனக் கூறப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ‘உடற்கூராய்வு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. அதற்காக மறு உடற்கூராய்வு செய்ய கோரவில்லை. வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

இதையடுத்து, விசாரணையை 60 நாட்களில் முடிக்க வேண்டும் என்று கூறி விசாரணை நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT