சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவரை உடனடியாக நியமிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆணையச் செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா உச்சிமலைகுப்பம் பகுதியைச் சேர்ந்த சி.பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வன்கொடுமைகளைத் தடுக்கவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கான சட்டம் 2021-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். இதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர்.சிவகுமார் தலைவராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
அவருக்குப் பிறகு, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி காலமானார். அவர் மறைந்த பிறகு, கடந்த 6 மாதங்களாக ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளது.
இந்த ஆணையம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள், உரிமைகள் பறிப்பு தொடர்பான புகார்களை விசாரித்தல், அரசுக்கு பரிந்துரைகளை வழங்குதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சட்ட அமலாக்கத்தை கண்காணித்தல் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பணிகளை ஊக்குவித்தல் போன்ற மிக முக்கியமான பணிகளைச் செய்கிறது.
தற்போது தலைவர் இல்லாததால், இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக பள்ளிகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
எனவே, ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளருக்கு கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதியை ஆணையத்தின் தலைவராக உடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர், இது தொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.