சென்னை: கொளத்தூர் அடுத்த வண்ணான்குளம், பெரவள்ளூர் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியில் உள்ள வண்ணான்குளம் ஏரி, பெரவள்ளூர் ஏரி பகுதியை சேர்ந்த சுமார் 300 ஏக்கர் நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிஉள்ளன.
இந்த ஏரிகளைச் சுற்றிஉள்ள அரசு புறம்போக்கு நிலங்களும் அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டுமானங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். இந்த 2 ஏரிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் முழுமையாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார். தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, அம்பத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் தரப்பில், ‘இந்த ஏரிகளில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு அதிகப்படியான நிலங்கள் ஒதுக்கப்பட்டு, அப்பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: வண்ணான்குளம் மற்றும் பெரவள்ளூர் ஏரிகள் ஆக்கிரமிப்பில் இருப்பது வருவாய்த் துறை அதிகாரிகளின் அறிக்கையில் தெளிவாகியுள்ளது.
எனவே, 2 ஏரிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினருடன் இணைந்து குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.
இந்த பணிகளை கண்காணி்க்க இந்த 3 துறைகளிலும் உள்ள மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை நில நிர்வாக ஆணையர் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு, அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.